தமிழகத்தின் பூர்வகுடிமக்களின் வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக, மதுரை அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுக்கு முந்தைய தமிழர்களின் சுமார் 5300 பண்டைய பொருட்கள் கண்டறியப்பட்டது. கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. ஆப்கன் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும் 2500 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ் மரபில் இருந்திருக்கிறது என்ற தகவல்கள் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு பரிணாமத்தை வழங்குகின்றன. காவிரிப்பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய தொல்லியல்துறை தமிழகத்தில் கீழடியில் ஆய்வு நடத்தி இருக்கிறது. ஆனால் கீழடி அகழாய்வு தற்போது தொடர்ந்து நடைபெறவில்லை.
மத்திய தொல்லில்துறையின் அகழ்விட அருங்காட்சியகம் நாற்பது இடங்களில் இருக்கிறது. இதில் தமிழகத்தில் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் மட்டும் உள்ளது. கீழடியில் கண்டெடுத்த பொருட்களை மைசூரில் இருக்கும் குடோனிற்கு எடுத்துச் செல்லாமல், இவையனைத்தும் கீழடி ஆராய்ச்சிகள் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் எனில், அந்த இடத்திலேயே அருங்காட்சியகம் வைப்பதுதான் சிறந்தது என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள்.இந்நிலையில் மேற்கொண்டு ஆய்வுக்குப் பணம் ஒதுக்கீடு செய்யாமல் இந்த ஆய்வை முடக்க மத்திய அரசு முயல்கிறது என்று குற்றசாட்டு வைக்கப்படுகிறது. நமது வரிப்பணத்தில் இயங்குகிற மத்திய தொல்லியல் துறை ஏன் கீழடி ஆய்வுக்குத் தொடர்ந்து பணம் தர மறுக்கிறது?மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத்துக்கு ஈடாகத் தென்னகத்திலும், அதிலும் குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மூதூர் மதுரையின் அருகில், வைகைக் கரையில் வளர்ந்துள்ள நாகரிகம் பற்றிய ஆய்வை மூடிமறைப்பது ஏன் என பலதரப்பட்ட கேள்விகளை பல்வேறு அமைப்புகளும் சமூகநல ஆர்வலர்களும் வைக்கின்றனர்.
இந்நிலையில் கீழடி அகழாய்வைத் தொடர வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் தொடர்முழக்கப் போராட்டத்தை மதுரையில் வரும் ஜனவரி 22ம் தேதி காலை 9 மணிக்கு நடத்தவுள்ளது.
மேலும் ஜனவரி 24ம் தேதி சென்னை-வள்ளுவர் கோட்டத்தில் வைத்து மாலை 4 மணிக்கும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, எடிட்டர்.பீ.லெனின், இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், அமீர், கரு.பழனியப்பன், ராஜூமுருகன், தாமிரா எழுத்தாளர்கள் பிரபஞ்சன், ஷோபா சக்தி நடிகர் சத்தியராஜ், நடிகை ரோஹிணி தமிழ்இணைய செய்திகள் நிர்வாகிகள் குழு உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக