இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக பொதுக்குழு கூடியது. காலை 7.00 மணியளவில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் அரங்கத்தில் நிரம்பியிருந்தனர்.
சரியாக 9.00 மணியளவில் பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, சுப்புலட்சுமி அனைவரும் ஒன்றாக மேடைக்கு வந்தனர். பொதுக்குழுவுக்கு ஆர்.எஸ்.பாரதி முன்மொழிந்தார், டி.கே.எஸ்.இளங்கோவன் வழிமொழிந்தார்,
அண்மையில் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோ, கோ.சி.மணி, சற்குணம் பாண்டியன், ஜெயலலிதா, சோ மற்றும் மறைந்த கழகத்தினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தனர்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கான வரவு-செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. அதோடு, சேலம் இரும்பு ஆலையை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்குதல் போன்ற தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
அதன்பின், ஆர்.எஸ்.பாரதி செயல்தலைவருக்கான கழக சட்டத் திருத்தத்தை அறிவித்தார். 9.51க்கு பேராசிரியர் அன்பழகன் சட்ட திருத்தத்தை பொதுக்குழு ஏற்றுக்கொள்வதாகவும், ஸ்டாலின் திமுக செயல்தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அறிவித்தார். 9.52க்கு துரைமுருகன் பேச ஆரம்பித்தார். தலைவர் வராத பொதுக்குழு இது. எனக்கு எல்லாமே அரசியலில் அவர்தான். தலைவர் மேடையில் உட்கார்ந்தபடி யார், யார் வந்திருக்காங்க, எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் வரவில்லை என்று கணக்கு எடுப்பார். என்றவர் பிறகு பேசமுடியாமல், வாய் விட்டும் அழாமல், தவித்து நின்று கண்களைத் துடைத்தபோது, அரங்கத்தில் இருந்த பலர் அழுதனர். ஸ்டாலினும், பேராசிரியரும் கண்கலங்கினார்கள். மீண்டும் துரைமுருகன், தலைவர் விட்ட சுமையை ஸ்டாலின் ஏற்பார், கட்சியை வழி நடத்துவார், சுயமரியாதை உள்ளவர் என்பதை சட்டமன்றத்தில் பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன், சட்டமன்றத்தில் திமுக-வை பற்றி குறை சொல்லிவிட்டு, ஜெயலலிதா உட்கார்ந்தார். அப்போது ‘திராவிட இயக்கத்தைப் பற்றி நீங்கள் பேசக்கூடாது அதற்கு உங்களுக்குத் தகுதியில்லை’ என்று சத்தமாக குரல் கொடுத்தார் ஸ்டாலின். அவரது தொடையில் தட்டி ‘சுயமரியாதையை காப்பாற்றிவிட்டாய் தம்பி’ என்று பாராட்டினேன், இந்த கழகத்துக்கு வழிகாட்டியாக தலைமையேற்று நடத்துவார் அதற்கான தகுதிகள் உள்ளது என்று பட்டியலிட்டார்.
பொதுச் செயலாளர் பேராசிரியரும், தலைவர் வராத இந்த பொதுக்குழுவுக்கு தலைமையேற்று நான் நடத்துவது வருத்தத்தை அளிக்கிறது என்று பேச ஆரம்பித்தவருக்கு குரல் கம்மியது. எப்பொழுதும் எழுதிவைத்துப் பேசாதவர் இன்று எழுதிக்கொண்டு வந்ததை படித்தார். கலைஞரைப் பற்றியும் ஸ்டாலின் செயல்தலைவராக சுமையை ஏற்றுக்கொண்டதாக கூறினார். அடுத்து செயல்தலைவரான ஸ்டாலின், பள்ளிப் பருவத்திலிருந்து, ஒவ்வொரு பதவிக்கும் ஜனநாயக முறையில் போட்டியிட்டு வெற்றிபெற்று வந்தது, சிறை போனது என்று கழகப் பணிகளில் பங்கேற்றதை எடுத்துச் சொல்லி, இது பதவி அல்ல, பொறுப்பு. அதை சரியாக செயல்படுத்துவேன். நன்றி என்றார்.
கூட்டம் முடிந்தபின் செயல்தலைவராக பொதுக்குழு தேர்ந்தெடுத்த தீர்மான நகலை எடுத்துக்கொண்டு தன் தலைவரிடம் ஆசி வாங்க கோபாலபுரம் விரைந்தார் ஸ்டாலின். கலைஞரும் ஆசி வழங்கினார். செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக