ஐந்து பாடங்களுக்கு ஒரு ஆசிரியர் என்றால், அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் எப்படி உயரும்?!'' - கொதிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு
திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ஒரு வேதனையான கருத்தை பதிவு செய்திருக்கிறார். 'தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்காக, நாடு முழுக்க ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், அந்தக் கல்லூரிகள் பலவற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லை. அந்தக் கல்லூரிகளில் படித்த ஆசிரியர்களின் தரமும் மோசமாக இருக்கிறது. இதனால், மாணவர்கள் தங்கள் பெயரைக்கூட எழுதமுடியாத அளவுக்கு, அவர்களின் கல்வி நிலை மோசமாக இருக்கிறது' என வேதனையாகக் கூறியுள்ளார்.
நீதிபதியின் இந்தக் கருத்து மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளின் நிலை குறித்து கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.
"நீதிபதி என்.கிருபாகரன் கூறியது முற்றிலும் உண்மையே. இன்றைக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள், பின்னர் பி.எட்., எம்.எட். முடித்து, ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல தனியார் கல்வியியல் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் தரமான கல்வி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. மேலும், அந்தக் கல்லூரிகளில் பயிலும் பல மாணவர்கள், கல்லூரிக்குச் சரியாக செல்லாமல், பணம் கொடுத்து வருகைச் சான்றிதழை பெறுகிறார்கள். இப்படியான மாணவர்கள் ஆசிரியர்களானப் பின்னர், அவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதில்லை. இதனால், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும் தங்கள் பெயரையே எழுதத் தெரிவதில்லை. இதுதான் நீதிபதியின் வேதனையும்கூட.
2012- 13-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியான தகுதியுள்ள ஆசிரியர்கள்தான் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். விதிவிலக்காக, அரசுப் பள்ளிகளில் பணம் கொடுத்தும், மனப்பாட திறனால் தகுதியானதுமான ஆசிரியர்கள் சிலரைத் தவிர்த்து, மற்ற அனைவருமே திறமையான ஆசிரியர்கள்தான். ஒவ்வோர் ஆசிரியரும் தான் படித்த ஒரு துறை பாடத்தில்தான் திறமை மிக்கவராக இருப்பார். ஆனால், தமிழக அரசுதான் அரசுப் பள்ளிகளில் போதிய பணியிடங்களை நிரப்பாமல் இருக்கிறது. இதனால், ஐந்தாம் வகுப்புக்குட்பட்ட பள்ளிகளில் ஒரே ஆசிரியரே மாணவர்களுக்கு ஐந்து பாடங்களையும் எடுக்கும் நிலை இருக்கிறது. ஓர் ஆசிரியரால், எப்படி ஐந்து பாடங்களையும் நல்ல முறையில் கற்பித்து, திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்? இத்தகைய அரசு பள்ளிகளின் தரமும் எப்படி உயரும்? என ஆவேசமாக கேள்வியை எழுப்புவதுடன் பிரின்ஸ் கஜேந்திரபாபு தனியார் பள்ளிகளில் இருக்கும் நிலையையும் கூறுகிறார்.
தனியார் பள்ளிகளிலோ குறைந்த ஊதியத்துக்குத் தகுதி குறைவான ஆசிரியர்கள் பலரை நியமிக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களுக்கு கடுமையான பணிச்சுமையும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களும் இத்தகைய தனியார் பள்ளிகளில் மனப்பாடம் செய்து படிப்பதற்கே தொடர்ந்து ஊக்கம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்களும், தங்கள் பிள்ளை அதிக மார்க் எடுத்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, பிள்ளையின் கற்றல் திறனைப் பார்ப்பதில்லை. சி.வி.ராமன், ராமானுஜம், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை என எந்த அறிஞரையும் தனியார் பள்ளிகள் உருவாக்கவில்லை. இன்றைக்கும் சமூகத்துக்கு உதவும்படியாக பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
ஒரு மாணவரைத் திறமையானவராகவும் எதிர்காலத்தின் நல்ல குடிமகனாகவும் மாற்றுவது, பள்ளி ஆசிரியர்களின் பணி. ஆனால், ஆசிரியர்களே வெறும் டிகிரி மட்டும் பெற்று, அந்த டிகிரிக்கு பொருத்தமான கல்வி அறிவுடன் இல்லாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய நிலை. இதனால், ஏராளமான மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து, அடிப்படை வசதிகள், கல்வி கற்கும் தகுதியில்லாத கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்க வேண்டும். தமிழக அரசும் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தி, தகுதியுள்ள ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்" என்கிறர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக