இளையராஜாவுக்கும் எஸ்பி பாலசுப்ரமணிக்கும் இடையே என்ன பிரச்சனை? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இளையராஜாவுக்கும் எஸ்பி பாலசுப்ரமணிக்கும் இடையே என்ன பிரச்சனை?

இளையராஜா- எஸ்.பி.பிக்கு  இடையேயான பிரச்சனை அவர்களுக்கிடையேயானது அல்ல.. அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை.

கலைத்துறையில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இரு மேதைகளும் தற்போது தங்கள் பயணத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களின் இசைவாரிசாக வந்தவர்கள் தந்தையைப் போல திறமை வாய்க்காததால் திரைத்துறையில் பெரும் தோல்வியை அடைந்து தற்போது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பணம் ஈட்ட முயன்றதின் விளைவுதான் இதுபோன்ற பிரச்சனைக்கு காரணம்.

சினிமா வாய்ப்பு அறவே இல்லாமல் வீட்டில் நீண்டகாலமாக ஓய்வில் இருந்த கார்த்திக் ராஜா தனது தந்தையை வைத்து இசைக்கச்சேரி நடத்துவது என முடிவு செய்து சில வருடங்களாக இசைக்குழுவோடு நாடு நாடக சுற்றிவருகிறார். கடந்த வருடம் அமெரிக்காவில் நடத்தி பெரும் தொகையை ஈட்டினார் .

தற்போது அதே வழியில் இறங்கியிருக்கிறார் எஸ்.பி.பி சரண். ஆரம்பத்தில் இளையராஜா இசைக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பி, சமீப காலங்களில் அதைத் தவிர்த்து வந்திருக்கிறார். காரணம், கார்த்திக் ராஜாவைப் போல தானும் தனது தந்தையை வைத்து நாடு நாடாக சுற்றி பணம் ஈட்டவேண்டும் என எஸ்.பி.பி சரண் ஆசைப்பட்டதால்.

இந்த இரண்டு வாரிசுகளுக்கிடையான போட்டிதான் இரண்டு மேதைகளை மோதிக்கொள்ளும் அளவுக்கு தற்போது கொண்டு சென்றிருக்கிறது. ஒருவரது இசைக்கச்சேரியில் இன்னொருவர் பாடவிரும்பவில்லை. அல்லது மறுக்கிறார். அப்படியெனில் அவர்களது இசைக்கச்சேரியில் இவர் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது. இவ்வளவுதான் பிரச்சனை.

ஆக இருதரப்புக்கு இடையேயான இந்த பிரச்சனை இசை சம்மந்தப்பட்டது அல்ல. வியாபாரம் சம்மந்தப்பட்டது. இரண்டு இசை வியாபாரிகள் மோதிக்கொள்கிறார்கள்.

இசை உலகத்தில் இது முதல்தடவை அல்ல. ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு பெரியவிஷயமும் அல்ல. முன்பு,  கே.ஜே.யேசுதாஸ் குரலை ஓரளவு ஒத்திருக்கிற பின்னணிப் பாடகர் உன்னிமேனன், சினிமாவில் வாய்ப்பு குறைத்த காலகட்டத்தில் இசைக்கச்சேரிகளில் யேசுதாஸ் பாடல்களைப் பாடி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தார்.

உடனே கே.ஜே.யேசுதாஸின் மகன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இனிமேல் தனது தந்தை பாடிய பாடல்களை உன்னிமேனன் மேடைகளில் பாடக்கூடாது என தடை வாங்கினார். ஒரு பாடகர் பாடிய பாடலை இன்னொரு பாடகர் பாடக்கூடாது என தடைவாங்கும்போது, அந்தப் பாடலை உருவாக்கியவர் என்கிற முறையில் வியாபார ரீதியாக அவரது பாடல்களை பயன்படுத்தக்கூடாது என தடை வாங்குவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. கண்டிக்கக்கூடிய விஷயமும் அல்ல.

சரி, பேஸ்புக்கில் இவ்வளவு பொங்கிய எஸ்.பி.பி, அந்த இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டுக்காகவா  அர்ப்பணிக்கப் போகிறார்..? அல்லது அனாதை ஆசிரமங்களுக்கு தானமாக வழங்கப்போகிறாரா..?

அவர், அவர் பாக்கெட்டை நிரப்ப இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதனால் என் பாக்கெட்டுக்கு வரும் வருமானம் குறைகிறது என இன்னொருவர் வக்கீல் நோட்டிஸ் அனுப்புகிறார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு தீர்க்கவேண்டிய விஷயம் இது. இதை நாம் ஏன்   பெரிதுபடுத்த வேண்டும்? ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here