நடப்பு 2017-18 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “இந்த 2017-18 நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் மட்டும் 8 சதவிகிதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். ஆனால் சராசரியாகப் பார்க்கும்போது இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி அளவு 7.5 சதவிகிதமாக இருக்கும். இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மிகவும் கடினமாக உள்ளது. கீழ்மட்ட மற்றும் நடுத்தர திறமை கொண்ட பிரிவினரிடையே வேலைவாய்ப்பு உருவாக்கம் சவால் நிறைந்ததாக இருக்கும்.
இந்தியாவின் முக்கியத் துறைகளான ஆட்டோமொபைல், பொறியியல், பெட்ரோலியம் சுத்திகரிப்பு, மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு குறைந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. ஆனாலும், போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுத்தான் வருகின்றன. சில ஊடகங்களில் இந்தியா வேலைவாய்ப்பு வழங்குவதில் தவறிவருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமானது. இதில் துவக்கத்தில் சிறிது காலத்துக்கு மந்தநிலை காணப்பட்டாலும், இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது. இந்தியாவில் 29 வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு வகையான வருவாயைக் கொண்டிருப்பதால் ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்தும்போது சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். நீண்டகால அடிப்படையில் அது நன்மை பயக்கும்” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக