கல்வி அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. குறிப்பாக, ஏழை மாணவர்களுக்குக் கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதிக மதிப்பெண் எடுத்தாலும், அவர்களால் உயர்கல்வியை எளிதில் தொடர முடியவில்லை. காரணம், அவர்களிடம் மதிப்பெண் இருக்கும் அளவிற்கு பணம் இல்லை. அதற்கான உதாரணமாக இந்த சம்பவம் விளங்குகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மாணவி ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1152 மதிப்பெண் எடுத்தும், குடும்ப வறுமை காரணமாக செங்கல் சூளையில் வேலை செய்து வரும் சம்பவம் வருத்தமளிக்கிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பக்கநாடு ஊராட்சி பகுதியின் குண்டுமலைக்காடு மாதேஸ்வரன் கோவில் பகுதியில் பாவாயி (35) என்பவர் வசித்து வருகிறார் . இவரது கணவர் ராஜேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு, பிரியங்கா(17), கோகில பிரியா (15), ரம்யா (13) என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
குடும்ப தலைவர் இல்லாததால் பாவாயி, செங்கல் சூளையில் வேலை பார்த்து தன்னுடைய பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் குடும்பம் சிக்கிக் கொண்டிருந்தபோதும், மூன்று மகள்களையும் பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரியங்கா பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1152 மதிப்பெண் பெற்றார். நல்ல மதிப்பெண் பெற்றும், மேற்கொண்டு படிக்க வசதி இல்லாத நிலையில் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால், பிரியங்கா தனது தாயுடன் செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், எனக்கு படிப்பில் அதிக ஆர்வமுண்டு. மருத்துவராக வேண்டும் என்பது எனது கனவு. அதனால், இரவும் பகலும், கஷ்டப்பட்டுப் படித்தேன். அதற்கு ஏற்றப் பலனாக தேர்வில் 1152 மதிப்பெண் பெற்றேன். மேலும், நான் வசித்து வரும் பகுதி மலைப்பகுதி என்பதால், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற அருகில் எந்தவொரு பயிற்சி மையமும் கிடையாது. 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட தலைநகருக்கு சென்றும் என்னால் படிக்க முடியாது.
வீட்டிலிருந்து படிக்க,இணையதள வசதிகூட இல்லை. அதனால், இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் என்னால் பங்கேற்க முடியவில்லை. தற்போது, என் தாயாருடன் வேலைக்குச் சென்று வருகிறேன். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைச் சேமித்து அடுத்த ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக