கூவத்தூர் பாணியில் குஜராத் எம்.எல்.ஏ-க்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கூவத்தூர் பாணியில் குஜராத் எம்.எல்.ஏ-க்கள்


குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலர், ஆளுங்கட்சியான பாஜக-வுக்கு தாவி வருவதால், தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போல, குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பெங்களூரிலுள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களைவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதில் இரண்டு இடங்களுக்கு பாஜக சார்பில் தேசிய தலைவர் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்ருமிதி இராணியும் போட்டியிடுகின்றனர். மூன்றாவது இடத்துக்கு காங்கிரஸ் சார்பில் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் போட்டியிடுகிறார். இதற்கிடைய காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வகேலா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். வரும் நவம்பர் மாதத்தில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்று வரை காங்கிரஸ் கொறடா பல்வந்த் சிங் ராஜ்புத் உள்பட 5 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக-வில் இணைந்தனர். இதில் காலியாகவுள்ள மூன்றாவது ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு அகமது பட்டேலை எதிர்த்து பல்வந்த் சிங் போட்டியிடுவார் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 காலியிடங்களுக்கு 4 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

குஜராத் சட்டமன்றத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 182 உறுப்பினர்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 57ஆக இருந்தது. அகமது பட்டேல் வெற்றிபெற 46 வாக்குகள் கண்டிப்பாக தேவைப்படுகிறது.ஆனால் தற்போது வரை எதிர்க்கட்சித் தலைவர் வகேலா, கொறடா பல்வந்த் சிங் ஆகியோர் உள்பட 6பேர் விலகிவிட்டதால், சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் பலம் 51 ஆக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் 10 எம்.எல்.ஏ-க்கள் வரை பாஜகவுக்கு மாறக்கூடும் என்று கூறப்படுவதால் அகமது பட்டேலின் வெற்றிவாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ புனாபாய் காமித்தை போலீஸ் அதிகாரி ஒருவர் கடத்தி சென்று, 'பாஜக-வில் சேர்ந்தால் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் பிடியிலிருந்து எம்எல்ஏ தப்பித்து விட்டார். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுக்க பாஜக சார்பில் 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். எம்.எல்.ஏ கடத்தல் விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியில் மாநிலங்களவை நாள் முழுவதும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மாநிலங்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வந்த் சிங்கை வெற்றிபெற செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அகமத் பட்டேல் தோல்வியடைந்தால், வரும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் அது காங்கிரசை பாதிக்கும் என்பதால், எம்.எல்.ஏ-க்களை பாதுகாக்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 44பேர் நேற்று (ஜூலை-28) நள்ளிரவு அகமதாபாத்திலிருந்து பெங்களூரு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரிசார்ட்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை எம்.எல்.ஏ-க்கள் இங்கு தங்கவைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here