எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தானாகவே எங்கள் அணிக்கு வந்தார். தற்போது தானாகவே விலகிச் சென்றுள்ளார். அவருக்கு எங்கள் அணியில் உரிய மரியாதை கொடுக்கப்பட்டது என்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வம் அணியிலிருந்த கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி நேற்று (ஜூலை 21), புரட்சித்தலைவி அம்மா அணியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று கூறி வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இன்று (22-07-2017)செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,' ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம்' என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம்,' எங்கள் அணியில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது. அவர் தானாகவே எங்கள் அணியில் வந்து சேர்ந்தார். தற்போது தானாகவே விலகி சென்றுள்ளார்.
தனி ஒரு மனிதனுக்கு கேள்வி கேட்க அனைத்து உரிமைகளும் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு நாகரீகமான முறையில் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். தமிழகத்தில் வேகமாக டெங்கு பரவி வருகிறது. எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதற்கிடையே 'பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகியதை பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர்' என்று ஆறுக்குட்டி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக