பூமிக்கடியிலிருந்து புகை :- மக்கள் அச்சம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பூமிக்கடியிலிருந்து புகை :- மக்கள் அச்சம்!


ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து அத்திக்கல் கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியிலிருந்து திடீரென தானாகவே புகை வருவதால் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவிலிருந்து அத்திக்கல் கிராமத்துக்குச் செல்லும் வழியில் நீத்தி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்குட்பட்டது. இந்த வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியிலிருந்து திடீரென புகை வெளியே வந்தது. இதைப் பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். சில நாள்களில் அந்த இடத்தில் பூமிக்கடியிலிருந்து புகை வெளியே வருவது தானாகவே நின்றுவிட்டது. அப்போது இந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதன்பிறகு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் அதே இடத்தில் பூமிக்கடியிலிருந்து தானாக புகை வந்தது. அப்போது வனத்துறையினர் புகை வந்த இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி, பூமிக்கடியிலிருந்து புகை வருவதைக் கட்டுப்படுத்தினர். பூமியிலிருந்து தானாக புகை வருவது குறித்து புவியியல் துறையினர் வந்து, அந்த இடத்தில் உள்ள மண்ணை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த மண்ணை ஆய்வு செய்ததில் புகை வந்த பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு கற்பூர மரங்களின் கிளைகள் புதைந்து இருந்திருக்கலாம் என்றும் அதனால் பூமியின் வெப்பத்தால் அந்த கற்பூர இலைகள் தீப்பற்றி எரிவதால், புகை வெளியே வந்திருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஜூலை 22ஆம் தேதி காலை முதல் நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியிலிருந்து மீண்டும் புகை வர தொடங்கியது. இந்தப் புகையானது பெரும் வெப்பத்துடன் வெளியில் வருவதால், அந்த வனப்பகுதியில் அருகில் உள்ள புற்கள், மரக்கிளைகள், தைலமரங்கள் கருகி வருகின்றன. மேலும், புகையுடன் ஒருவிதமான தூர்நாற்றமும் வீசுகிறது. இதனால், அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பூமிக்கடியிலிருந்து தானாகவே புகை வருவதால், அந்த இடத்தில் ஆய்வுசெய்து புகை வர காரணம் என்ன என்பது குறித்த உண்மை நிலையைக் கண்டறிந்து அதிகாரிகள் மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நீத்தி வனப்பகுதியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு அடியிலிருந்து புகை வெளியே வருவதால் பொதுமக்களிடையே பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here