எல்லை தாண்டிவந்து மீன் பிடிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையால் அனுதினமும் தமிழக மீனவர்கள் கடலில் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் செல்லும் விலை மதிப்புமிக்க மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு, இலங்கைக் கடற்கரையோரம் கட்டிப்போடப்பட்டே சிதிலம் அடைகின்றன.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களிலேயே இந்த விவகாரம் பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார். அதில் மீனவர்களை மீட்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி, 21ஆம் தேதிகளில் 12 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜூலை 22ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்… “கடந்த 16, 21 தேதிகளில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள், 2 படகுகள் உட்பட இதுவரை இலங்கை சிறையில் இருக்கும் மொத்தம் 72 மீனவர்களையும் 148 படகுகளையும் மீட்டுத் தர வேண்டுகிறேன்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இதற்கிடையில்… கடந்த ஜூலை 20ஆம் தேதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நாடாளுமன்றத்தில், ‘இலங்கை சிறைகளில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?’ என்று எழுத்துபூர்வமாக கேட்ட கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில், “ஜூலை 17 தேதி நிலவரப்படி இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 81 இந்திய மீனவர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரோ இலங்கை வசம் ஜூலை 17ஆம் தேதி நிலவரப்படியே 81 மீனவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 22ஆம் தேதி தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 72 பேரை விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அப்படியென்றால் உண்மையிலேயே இலங்கைவசம் இருக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை எத்தனை என்ற குழப்பம் ஏற்படுகிறது.
இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வட்டாரத்தில் நாம் பேசியபோது, “இந்திய மீனவர்கள், தமிழக மீனவர்கள் என்ற பதத்தால் வரும் குழப்பம்தான் இது. கன்னியாகுமரியில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல… கேரள மீனவர்கள், ஒடிசா மீனவர்கள், ஏன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மீனவர்கள்கூட மீன்பிடித் தொழிலாளர்களாக மீன் பிடிக்கச் செல்கிறார்கள். படகுகள் தமிழ் மீனவர்களுக்கு உரிமையானதாக இருக்கும். பெரும்பாலான படகு உரிமையாளர்களே மீன் பிடிக்கவும் செல்வார்கள். ஆனால், சில படகுகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த மீனவத் தொழிலாளர்கள் மீன்பிடிக்கச் செல்வார்கள். அவர்கள் தமிழக படகுகளில் செல்வதால், தமிழ்நாட்டு மீனவர்களோடு அவர்களையும் மீட்க வேண்டியது தமிழக அரசின் கடமை. நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சொன்ன எண்ணிக்கையும், தமிழக முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எண்ணிக்கையும் முரண்படுவது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
ஏனெனில் அரசுகளுக்கு இது வெறும் எண்களாக இருக்கலாம். ஆனால், குடும்பத் தலைவர்களைப் பறிகொடுத்துவிட்டு கதறும் மீனவர்களின் குடும்பங்களின் ஸ்தானத்தில் இருந்து இதை அணுக வேண்டும்’’ என்று கூறினார்கள்.
இலங்கையிடம், எத்தனை இந்திய மீனவர்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள்? உண்மையிலேயே தீர விசாரிக்க வேண்டிய வினா இது.
- ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக