பீகார் மாநில கூட்டணி ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு, ஊழலுக்கு எதிரான போரில் செயல்படுவதாகக் கூறி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த சில மணி நேரங்களிலேயே ஐக்கிய ஜனதாதளத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்ததால் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று ஜூலை 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்கிறார்.
பீகாரில் நிதிஷ்குமாரின் ஒருங்கிணைந்த ஐக்கிய ஜனதாதளம் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியதில், நிதிஷ்குமார் முதல்வராகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வராகவும் இருந்தனர். இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேக்காக வாங்கிய நிலங்களைப் பினாமி பெயரில் பதிவு செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது மற்றும் ரயில்வே ஓட்டலுக்கு டெண்டர் வழங்கியது தொடர்பாகவும் சி.பி.ஐ. போலீஸார் கடந்த ஜூலை 7ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும், லாலுவின் மகள் மற்றும் மருமகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. போலீஸார் சோதனை நடத்தினர். இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து, அதற்கான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் நிதிஷ்குமார் கால அவகாசம் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கூட்டணியில், கடந்த சில நாள்களாகவே விரிசல் தோன்றியது.
தேஜஸ்வி யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், தேஜஸ்வி யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. மேலும், இதுகுறித்து, செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், “துணை முதல்வர் பதவியில் இருந்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக மாட்டார். நிதிஷ்குமாரை முதல்வராக்கியதே நான்தான்” என்று கூறினார். மேலும், “நிதிஷ்குமாருக்குத் தெரியும் அவரே கொலை வழக்கு குற்றவாளி என்று. கொலை மற்றும் ஆயுத வழக்கில் முக்கிய குற்றவாளி முதல்வர் நிதிஷ்குமார்தான். ராஷ்டீரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். புதிய தலைவரைத் தேர்வு செய்து ஆட்சி அமைக்க வேண்டும். இதில், நிதிஷ்குமாருக்கு நாட்டமில்லை என்றால் அவர்கள் ஏற்கெனவே பாஜக-வுடன் இணையத் திட்டமிட்டு விட்டார்கள் என்பதை நிரூபித்துவிடும்” என்றும் கூறினார்.
இருப்பினும், தனது மகனின் பதவி விவகாரம் தொடர்பாக இத்தகைய நிலை வரும் என்று உணர்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமாரின் ராஜினாமாவால், வருகிற 2019 பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உருவாக்க முயலும் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் ஆபத்து ஏற்படும் என்று கருதி, நிதிஷைச் சமாதானப்படுத்தி, வெளியில் இருந்து தனது எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக்கும் முயற்சியையும் அவர் தொடங்கியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதாதள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று ஜூலை 26ஆம் தேதி மாலை ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, கவர்னர் மாளிகைக்குச் சென்ற நிதிஷ்குமார், கவர்னர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பீகாரில் தற்போது நிலவும் சூழ்நிலையில் என்னால் ஆட்சியைத் தொடர முடியாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முற்படுவேன். நான் அளித்த ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டார். அடுத்த நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து பதவியில் இருக்கும்படி கூறியுள்ளார். எனது ராஜினாமாவுக்காக நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. பேராசை எப்போதும் வெற்றி பெறாது” என்று கூறினார்.
பீகார் துணை முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக மறுத்து வரும்நிலையில், நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பாராட்டு தெரிவித்து கூறுகையில், ‘ஊழலுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவதற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உங்களுக்கு வாழ்த்துகள். நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் உங்களின் நேர்மையான நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், உறுதுணையாகவும் இருப்பார்கள்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
பீகார் சட்டசபையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. இவற்றில் ஐக்கிய ஜனதாதளம் 71 இடங்களையும், ராஷ்டீரிய ஜனதாதளம் 80 இடங்களையும், காங்கிரஸ் 27 இடங்களையும் கொண்டுள்ளன. பாஜக 53 இடங்களையும், எல்ஜிபி 2 இடங்களையும், ஆர்எல்எஸ்பி 2 இடங்களையும், ஹெச்எம் 1 இடத்தையும், சிபிஐ (எம்எல்) விடுதலை 3 இடங்களையும் கொண்டுள்ளன. இதில், ஐக்கிய ஜனதாதளத்துக்கு, பாஜக ஆதரவு கொடுத்தால் எளிதாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலை இருந்தது. அதையடுத்து, பாஜக கட்சியின் நாடாளுமன்றக் கூட்டம், டெல்லியின் அசோகா சாலையில் உள்ள பாஜக-வின் தலைமையகத்தில் நேற்று இரவு கூடியது. அதில் நிதிஷ்குமாருக்கு ஆதரவு கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதையடுத்து, பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதையொட்டி, இன்று ஜூலை 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்கிறார்.
இதற்கிடையில் பீகார் மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதி உடல்நலமின்றி நேற்றிரவு திடீரென்று பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அதனால், பாஜக-வும், ஐக்கிய ஜனதாதளமும் திட்டமிட்டபடி இன்று மாலை பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்க முடியுமா என்பது கவர்னரின் உடல்நிலையைப் பொறுத்தே அமையும்.
நேற்று மாலை 6.5௦ மணியில் இருந்து இரவு 10.50-க்குள் பீகார் மாநில அரசியலில் தொடர்ந்து அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக