இந்தியா சீனா இடையே சிக்கிம் மாநில எல்லைப் பகுதியான லேக் டாம் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவரும் விரும்பத் தகாத சம்பவங்கள் ஆசியாவிலேயே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மாறிக் கொண்டிருக்கின்றன.
இரு நாட்டு தரப்பினரும் மாறி மாறி ஏதோ அரசியல்வாதி போல, ‘என் பலம் உனக்குத் தெரியுமா?’ என்று சவால் விட்டனர்.
இந்நிலையில் உத்தர காண்ட் மாநிலத்திலுள்ள பரோட்டி இந்திய சீன எல்லையில் இந்தியாவுக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சீன ராணுவம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி நுழைந்ததாக, இன்று ஜூலை 31 ஆம் தேதி பெயர் குறிப்பிடாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது PTI செய்தி நிறுவனம் .
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் பரோட்டி பகுதி இந்தியா சீனா எல்லைப் பகுதியாக அமைந்திருக்கிறது. 1958 ஆம் ஆண்டே இந்தியாவும், சீனாவும் பரோட்டி பகுதியை உரிமை கோரியதால் இது சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி பரோட்டி பகுதியில் இந்திய எல்லைக்குள் ஒரு கிலோ மீட்டர் வரை ஊருடுவிய சீன ராணுவத்தினர் , அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இந்தியர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இந்தத் தகவல் ஆறு நாட்கள் கழித்து சமோலி மாவட்ட அதிகாரிகள் மூலம் இன்று கசிந்துள்ளது.
இந்திய சீன எல்லைப் பகுதிகள் மூன்று செக்டர்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு செக்டர் அருணாசல பிரதேச எல்லை, மேற்கு செக்டர் லடாக், மிடில் செக்டர் எனப்படும் மத்திய செக்டார் பரோட்டி பகுதி என அழைக்கப்படுகிறது. கடந்த 1962 இந்திய சீன போரில் சீன படைகள் கிழக்கு, மேற்கு செக்டர்களை குறிவைத்ததே தவிர மத்திய செக்டர் ஆன உத்தரகாண்ட் மாநிலம் பரோட்டி பகுதியைத் தொடவே இல்லை.
இந்நிலையில் ஏற்கனவே சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய சீன இந்திய எல்லை பதற்றமாக இருக்கும் நிலையில் உத்தரகாண்ட் எல்லையிலும் சீனா ஊடுருவியிருக்கிறது.
2000 ஆம் ஆண்டு இந்திய சீன பேச்சுவார்த்தைக்குப் பிறகு பரோட்டி பகுதியில் இந்தியா சார்பான இந்தோ-திபெத் எல்லை காவல்படை ஆயுதங்களை ஏந்தியிருக்காது என்று தீர்மானிக்கப்பட்டது. அன்று முதல் இந்த எல்லையில் இந்திய திபெத் எல்லைக் காவல்படையினர் ஆயுதம் ஏந்தாமல் சிவில் உடையில் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் சீன ராணுவம் இந்த பகுதியில் அத்துமீறியுள்ளது.
இதுபற்றி அப்பகுதியில் ஆடு மேய்த்து வருபவர்களிடம் இந்திய திபெத் எல்லை காவல் படையினர் விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக