கடந்த 2012ஆம் ஆண்டு தனியார் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையிலிருந்து கீழே விழுந்த சுருதி என்ற சிறுமி பேருந்து சக்கரத்தில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு பள்ளி பேருந்து முறையாக பராமரிக்கப்படாததே முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் பள்ளிப் பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 30.09.2012 அன்று பல சிறப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டது.
இந்த விதிகளின் அடிப்படையில் நடப்பாண்டில், 28,615 பள்ளிப் பேருந்துகள் மாவட்டக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் ஆட்டோ ரிக்ஷா, மோட்டார் கேப் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பையும் கவனத்தில்கொண்டு, இந்த வாகனங்களுக்கு ஓர் ஒழுங்குமுறையைப் போக்குவரத்துத்துறை ஏற்கெனவே 2012ஆம் ஆண்டு வழங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று (ஜூலை 25) மீண்டும் ஒழுங்குமுறை விதிகளை வரையறை செய்துள்ளது.
அதன்படி விதிகள் வருமாறு, “பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் உரிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், இவ்வாகனங்கள் உரிமையாளர்களால், அல்லது ஓட்டுநர்களால் பதிவு செய்யப்படுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தில், உரிய பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடம் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களை ஏற்றிச்செல்லும்போது, இருக்கை அளவைவிட 1.5 மடங்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்லக் கூடாது. வாகனத்தின் முன்புறமும், பின்புறமும், ‘ON SCHOOL DUTY’ என்று ஆங்கிலத்திலும், தமிழில் 'பள்ளிப் பணிக்காக' என்றும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இந்த அறிவுரைகள் போக்குவரத்து மற்றும் காவல்துறை அலுவலர்களால் செயல்படுத்தப்பட்டு, தவறு நடக்கும்பட்சத்தில், வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக