!
தமிழகத்தில் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஜூலை 25ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சசிதரூர் (காங்கிரஸ் எம்.பி)
“உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே, தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொன்றாக அடுத்தடுத்து கட்டாயப்படுத்துவது நல்லதல்ல. நாடாளுமன்றத்தில் நாம் இதுபோல் செய்வதில்லை. நாட்டுப்பற்று என்பது ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்து வர வேண்டும். ஆனால், வலுக்கட்டாயப்படுத்தி தேசிய கீதத்தை பாட வைப்பதால், மக்களுக்கு நாட்டுப்பற்று வந்து விடாது. வந்தே மாதரம் பாட வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கு அதற்கான வாய்ப்புத் தரப்பட வேண்டும். அதேநேரத்தில், பாட விருப்பம் இல்லாதவர்களுக்கும் அதற்கான சுதந்திரம் தரப்பட வேண்டும்” என்றார்.
இதே விவகாரத்தில் கருத்துத்தெரிவித்துள்ள இன்னொரு காங்கிரஸ் எம்.பி. ரஞ்சித் ராஜன், “தேசிய கீதம் பாடுவதை வைத்து ஒருவரின் நாட்டுப்பற்றை எப்படித் தீர்மானிக்க முடியும்? தேசிய கீதத்தை பாடுவதன் மூலம்தான் நாட்டுப்பற்றை நிரூபிக்க முடியும் என்று பி.ஜே.பி. அரசு ஏன் கட்டாயப்படுத்துகிறது?” என்றார்.
தமிழிசை சௌந்தரராஜன் (பாரதிய ஜனதா தமிழ் மாநிலத் தலைவர்)
“வந்தே மாதரம் பாடலை பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒருமுறை ஒலிபரப்ப வேண்டுமென்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு கொடுக்கிறேன்.”
ஹெச்.ராஜா (பாரதிய ஜனதா தேசிய செயலாளர்)
“முதலில் இந்த உத்தரவு குறித்து கருத்து கேட்பதே தவறு என்று சொல்லுவேன். ஒரு நாட்டுப்பற்று வளர்க்கும் பாடலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தப் பின்புதான் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. இதில் வேறுபாடு இருக்குமா என்ன? பள்ளிக்கூடங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பாக, நாமாக அல்லவா பாடியிருக்க வேண்டும். மாநில அரசும் பள்ளி நிர்வாகங்களும் இதைக் கட்டாயமாக்கியிருக்க வேண்டாமா? இதை நீதிமன்றம் அறிவுறுத்தும் வகையிலா இருப்பது? உலகத்திலேயே தேசிய கீதம் பாட சட்டத்தின் எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறது என்று கேட்கும் வக்கிரமான தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் இருப்பது இந்த நாட்டில்தான். இது பாட வேண்டுமா என்கிற கேள்விக்கு அப்பாற்பட்டது. இதை உடனடியாக பின்பற்ற வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன்.”
கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)
“வங்கமொழி புரட்சிக்கவி பக்கிம் சந்திர சட்டர்ஜியால் 1876ஆம் ஆண்டு எழுதப்பட்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக முழங்கப்பட்டது. வங்கமொழி மற்றும் சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டு எழுதப்பட்ட வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது. வந்தே மாதரப் பாடல் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டதாகக் கருதப்பட்டது. மறைமுகமாக இந்து தெய்வமான துர்கைக்கும் ஒப்புமைப்படுத்துவதாக கருதியதால், சமய சார்பற்ற நாட்டுப்பண்ணைத் தேர்ந்தெடுக்கும் முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்கப்படவில்லை. மேலும், வந்தே மாதரப் பாடல் இடம்பெற்றிருந்த பக்கிம் சந்திரரின் நூல் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை கொண்டிருந்ததாகவும் கருதப்பட்டது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கி இருந்த காரணத்தாலேயே வந்தே மாதரம் பாடுவது நிறுத்தப்பட்டது.
மீண்டும் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சொல்வது மதச்சார்பின்மை தத்துவத்துக்கு எதிரானது. வந்தே மாதரம் பாடல் குறித்து சர்ச்சை எழுந்ததாலேயே அது சட்டசபையில் பாடுவது நிறுத்தப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் சட்டசபை குறிப்பேடுகளிலேயே உள்ளது.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக