மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமானால் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அதிமுக-வில் இணைய வேண்டுமென அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் தற்போது சிஸ்டம் சரியில்லை என்றும், போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றும், தான் அரசியலுக்கு வரப்போவதை சூசகமாக தெரிவித்தார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது நடிகர் கமல்ஹாசனும் தமிழக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும் அமைச்சர்கள் கமல்ஹாசனை தாக்கிப் பேசுவதும், அதற்கு கமல் பதிலளிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் தான் முன்பே அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதையெல்லாம் விட அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் கமல்ஹாசனை 'உலக்கை நாயகன்' என்று விமர்சித்திருந்தது. கமல்ஹாசனுக்கு ஸ்டாலின்,விஜயகாந்த் உள்பட பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இன்று (ஜூலை 23) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,' மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைத்தால், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அதிமுக-வில் இணைந்து சேவை செய்ய வேண்டும். கமல்ஹாசன் அதிமுக-வில் இணைந்த பிறகு அவரது குறைகளை சொன்னால், அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். ஆனால் மக்கள் நடிகர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக