குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா தமது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
1996 முதல் 1997ஆம் ஆண்டு வரை குஜராத் மாநில பாஜக முதல்வராகப் பதவி வகித்தவர் ஷங்கர் சிங் வகேலா. அப்போது, பாஜக மாநிலத் தலைமையுடன் வகேலாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் பாஜக-வில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்து விட்டார். அதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து தீவிரமாக பாஜக-வை எதிர்த்து இவர் பிரசாரம் செய்து வந்ததையடுத்து, காங்கிரஸ் தலைமையின் நம்பிக்கைக்குரியவராக வகேலா தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.-வாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போதைய 13-வது சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைய இருக்கும்நிலையில், வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாத இறுதியில் குஜராத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான வகேலா, அம்மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். குஜராத் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வகேலா காங்கிரஸ் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால், அதற்கு காங்கிரஸ் மேலிடம் தரப்பில் வகேலாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, வகேலாவுக்கு ஆதரவான 8 எம்.எல்.ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த 8 எம்.எல்.ஏ-க்களும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மேலிடம் வகேலாவின் 77-வது பிறந்த நாள் விழாவில் யாரும் பங்கேற்க கூடாது என உத்தரவிட்டது.
அதையடுத்து, குஜராத்தில் காந்தி நகரில் நேற்று ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற பிறந்த நாள் விழாவின்போது செய்தியாளர்களிடம் வகேலா பேசுகையில், காங்கிரஸ் என்னை 24 மணிநேரத்துக்கு முன்பே நீக்கிவிட்டது; எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் என என்று கூறினார். அதைத்தொடர்ந்து, தனது முகநூல் பக்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் என்றிருப்பதை எடுத்துவிட்டு, குஜராத் முன்னாள் முதல்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், வகேலாவுக்கும், காங்கிரசுக்கும் மோதல் அதிகரித்ததையடுத்து, வகேலா தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது தமது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பாஜக-வில் இணைவாரா என்பது விரைவில் தெரியவரும்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, நேற்று ஜூலை 21-ஆம் ஆண்டு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வகேலாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வகேலாவுக்கு , காங்கிரஸ் கட்சி எப்போதும் தனிமரியாதை கொடுக்கும். மேலும், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மத்திய அமைச்சர் போன்ற பதவிகளை காங்கிரஸ் கட்சி அவருக்கு வழங்கி மரியாதை செய்தது. தற்போது, அவர் தற்போது குஜராத் மாநில சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். கட்சிப்பதவிகளில் இருந்து அவர் விலகினாலும், காங்கிரசில் அவர் தொடர்ந்து உழைப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக