பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 முதல் 2009ம் ஆண்டுவரை தொடர்ந்து போராடி வந்தது. பின்னர் 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி இந்தியா, அமெரிக்கா, மலேசியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற 31 நாடுகள் இதற்குத் தடை விதித்தது.
ஐரோப்பிய ஒன்றியம் மூலம் கடந்த 2001ம் ஆண்டு பயங்கரவாத அமைப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 13 தனி நபர்களும், 22 அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 2006ம் ஆண்டு இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு ஈழப்போர் முடிந்ததையடுத்து விடுதலைப்புலிகளில் பெயர் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் (இன்று ஜூலை 26) அறிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் அமைப்பு எந்தத் தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபடாததாலும் 2009ஆம் ஆண்டுக்குப்பின்னர் விடுதலைப்புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும் அதன் மீதான தடை நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் விடுதலைப் புலிகள் மீது இருந்த தடை நீங்கியுள்ளது. அதே நேரத்தில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் தடை தொடர்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக