பெரம்பலூர் பள்ளிகளில் அழுகிய சத்துணவு முட்டைகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பெரம்பலூர் பள்ளிகளில் அழுகிய சத்துணவு முட்டைகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கியதை கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடிகர் கமலஹாசன் தமிழ்நாட்டில் எங்கும் ஊழல் நிறைந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் கமலஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து, கமலஹாசன் எப்போதும் நான் ஊழலுக்கு எதிராக இருப்பேன். ஊழல்களை அம்பலப்படுத்துவேன் என்று கூறினார். நடிகர் கமலஹாசனின் இந்த பேச்சுகள் அவர் அரசியலுக்கு வரப் போகிறார் என்று சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிரான நடிகர் கமலஹாசனின் பேச்சைத்தொடர்ந்து, கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் தங்களின் அரசியல் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் ஜூலை 24ம் தேதி பெரம்பலூரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கன்வாடி மையத்திலுள்ள 3 வயது 4 வயது குழந்தைகளுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், குழந்தைகளுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதை தடுத்து நிறுத்திய கமலஹாசன் ரசிகர்கள், இந்த விஷயத்தை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், பெரம்பலூர் ஒன்றியம், நகரம், வேப்பந்தட்டை ஒன்றியம், குன்னம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மைய்யம் மற்றும் ஆரம்ப பள்ளிகளில் கமலஹாசன் ரசிகர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுகிறது என்று கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

அங்கன்வாடி மைய்யம் மற்றும் அரசு பள்ளிகளில் அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவது குறித்து கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்க பொறுப்பாளர் முத்துக்குமார் நம்மிடம் கூறுகையில், "எங்கள் நற்பணி இயக்க தலைவர் கமலஹாசன் ஊழலுக்கு எதிராக இருப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அங்கன்வாடி மைய்யம் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டை போடுவதாக சில ஆசிரியர்கள் எங்களுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட கமலஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர்கள் குமார், சாதிக்பாட்ஷா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் ஜூலை 24ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். அங்கன்வாடி மைய்யங்களில் சத்துணவு ஊழியர்கள் 2வயது 3வயது குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகளைக் கொடுத்து குழந்தைகளின் உயிரோடு விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். பின்னர், குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதை தடுத்து நிறுத்தினோம். இது குறித்து மாவட்ட செய்தித்தொடர்பு அலுவலரிடம் தகவல் தெரிவித்தோம். அவர் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கப்படுவது தொடர்ந்தால், கமலஹாசன் ரசிகர்கள் நற்பணி இயக்கத்தினர்களான நாங்கள் போராட்டம் நடத்துவோம். இதற்காக சிறை செல்லவும் தயங்கமாட்டோம் என்று முத்துக்குமார் கூறினார்.

அண்மையில், சத்துணவு திட்டத்துக்கு அழுகிய முட்டைகள் சப்ளை செய்யப்பட்டிருப்பது வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக அரசு விதித்த ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக பண்ணையாளர்கள் முட்டை சப்ளை செய்வதால்தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அழுகிய முட்டை சப்ளை செய்த சம்பவத்தை தொடர்ந்து சமூகநலத்துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து சத்துணவு மையங்களையும் அடிக்கடி ஆய்வு செய்து முட்டையின் தரத்தை சோதிக்கும் படி அறிவுறுத்தியது. மேலும், அக்மார்க் தரத்திலான முட்டைகளைத்தான் சத்துணவு திட்டத்துக்கு சப்ளை செய்யவேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனாலும், தொடர்ந்து, மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கிவருவது கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here