#காலுக்கு_செருப்புமில்லை!
#கால்வயிற்றுக்_கூழுமில்லை!
1907 ஆக 21நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் ப.ஜீவானந்தம். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.
அந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார்.
தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.
மகனின் போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் ஜீவா! அப்போது 17 வயது!
1932இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அந்தசமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக்கொள்ள முடியவில்லை. சீறி எழுந்தார்.
அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை எழுச்சியடைய வைத்தன. சிறையிலிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கை, கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.
இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டு கள் சிறையில் கழிந்தது. ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என வாழ்ந்தவர்!
நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களில்...
கோடிக்கால் பூதமடா;
கோபத்தின் ரூபமடா!
காலுக்கு செருப்புமில்லை;
கால்வயிற்றுக் கூழுமில்லை!
இவைகள் இவரின் புகழ்பெற்ற பாடல் வரிகள்! ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.
‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை வண்ணாரப் பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல் 1957 வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959இல் ‘தாமரை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.
1961இல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம், சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். ‘புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
தன்னலம் கருதாமல் இளைய தலை முறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார். இன்று அவரின் பிறந்த தினம்!
தமிழரின் ஐயாயிரமாண்டு நாகரிக பாரம்பரிய கீழடியை காலடியில் போட்டு புதைக்கும் மத்திய அரசு... அதில் நீரை ஊற்றிச் சேறாக்கி, தமிழர் உரிமையை நாசமாக்கும் மாநில அரசுகள்...
கோலோச்சும் இன்றைய சூழலில் ப.ஜீவானந்தம் போன்ற தமிழ் அறிஞர்கள் வளர்த்தெத்த தமிழ் மண்ணின் பெருமையையும், தமிழர் உரிமையையும், பாரம்பரியத்தையும் முன்னெடுத்து செல்வதும், பாதுகாப்பதும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின், தமிழரின் கடமையமாகிறது!
ஆம், தமிழர் உரிமையை மீட்டெடுக்க, ஜீவா பிறந்த இந்நாளில் சபதமேற்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக