விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகள் அதிகம் இடம் பெற்றிருந்தன.
மெர்சல் திரைப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் தாயரிக்கும் 100 வது படமாகும் . விஜய்யும் ஏ.ஆர். ரஹ்மானும் திரைத் துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகின்றன. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு படக் குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் விழா அரங்கில் குவிந்திருந்தனர். இந்நிகழ்ச்சியை சன் டிவி நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான், "25 ஆண்டுகளான தனது திரைவாழ்க்கையில், இப்போதுள்ள ரசிகர்கள் புது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனால் எனக்கு வயது குறைந்து விட்டது" என தெரிவித்தார்.
நடிகர் விஜய் திரைத் துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகியுள்ளது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், "ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும். அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்" என்று உற்சாகம் பொங்கப் பேசினார்.
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், "ஓ.பி.எஸ்.ஸும் ஈ.பி.எஸ்.ஸும் ஒண்ணு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் சேர்ந்தால் விஜய் தான் இனி சி.எம்." என்றார். இதனை கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர் (கொஞ்சம் இடைவெளி விட்டு) "சி.எம்.னா கலெக்ஷன் மன்னன்" என அவருக்கே உரித்தான கிண்டலில் பேசினார்.
இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, "ஆளப்போறான் தமிழன் பாடல் தமிழர்களிடையே அதிகமாய் முணுமுணுக்கப்படுகிறது. இந்த பாடல் வெறும் பாடலாக மட்டும் அமைந்து விடாமல்,இதன் அடுத்தகட்டத்துக்கான நகர்வு குறித்து தளபதி யோசிக்க வேண்டும்" என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில்,"ஆளப்போறான் தமிழன் வெறும் ஓப்பனிங் பாடலாக மட்டுமில்லாமல் அரசியல் குறித்தும் எழுதியிருக்கிறேன். இப்படி எழுதியிருக்க காரணம் விஜய்யின் உள்முகம்தான். ஜல்லிக்கட்டு போன்ற தமிழனின் பல்வேறு பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து வருபவர் விஜய். அவரின் ஒவ்வொரு செயல்பாடுகள் குறித்தும் அவரது மனம் அறிந்தும்தான் இந்த பாடலை எழுதியிருக்கிறேன். இந்த பாடல் நிஜமானால் எனக்கு மிகுந்த சந்தோஷம்" எனத் தெரிவித்தார்.
இவ்வாறாக மெர்சல் இசைவிழாவில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் தீபாவளி வெளியீடாக வெளிவரவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக