அதிமுக-வில் நொடிக்கு நொடி ரசாயன மாற்றங்கள் நடந்துகொண்டே வருகின்றன. இவர் இந்த அணியில் இருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருவரது அகநானூறு வேறாகவும், புறநானூறு வேறாகவும் இருக்கிறது.
இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிமுக-வின் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர் அணியும் இணையும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியிருக்கிறது. ‘விரைவில் ஒன்றுபட்ட அதிமுக-வைப் பார்ப்பீர்கள்’ என்று முதலமைச்சர் குட்டிக் கதைகளைச் சொல்லி வருகிறார். ஓ.பன்னீரோ, ‘விரைவில் நல்ல செய்தி வரும்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு நழுவிவிடுகிறார். இன்று எடப்பாடி - ஓ.பன்னீர் ஆகிய இரு அணிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆகியோர் சென்னைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்று அணிகள் இணைப்பு ஒருபக்கம் நடந்தால்கூட... தினகரன் தனது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு ‘சம்பவத்தை’ நிகழ்த்த சமயோசிதமான சில காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படலத்தின் ஒரு பகுதியாக நேற்று தென்மாவட்டங்களில் இருந்து சென்னையைத் தாக்கிய ஒரு செய்தி, ‘அணிகள் இணைவது ஒருபக்கம் இருக்கட்டும்; சபாநாயகர் தனபால் இப்போது யார் பக்கம் இருக்கிறார்? அவர் தினகரன் பக்கம் இருப்பதுபோல தெரிகிறதே?’ என்பதுதான்.
கேள்விவந்த திசையில் விசாரித்தால் பல தகவல்கள் கிடைத்தன.
ஒண்டி வீரன் நினைவு நாள்!
விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 247ஆவது நினைவு தினம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை ஒட்டி நெல்லை மாவட்டத்திலுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அரசு சார்பில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார் சபாநாயகர் தனபால். ஒண்டிவீரன் அருந்ததியர் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தனபால் வருடந்தோறும் வந்து மரியாதை செலுத்துவதைக் கடமையாக வைத்திருக்கிறார். இப்போது சபாநாயகர் என்ற முறையிலும் வந்து, சமாதானபுரத்தில் உள்ள மணி மண்டபத்தில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நெற்கட்டும்சேவலில் உள்ள பச்சேரி கிராமத்தில் ஒண்டிவீரனின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதற்காக நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கியவரிடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்ட, ‘அரசு சார்பாக ஒண்டிவீரனுக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி அணிகள் இணைப்பு பற்றியெல்லாம் கேட்காதீர்கள். நான் சபாநாயகர். பொதுவானவன்’ என்று சிரித்துக்கொண்டே நெல்லைக்குப் புறப்பட்டார்.
வரவேற்க வந்த விஜிலா
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சபாநாயகரை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வரவேற்று நெல்லைக்கு அழைத்துச்சென்றது கட்சியின் மகளிரணிச் செயலாளரும், ராஜய்சபா எம்.பி-யுமான விஜிலா சத்யானந்த்.
இது அதிமுகவினரிடையே சசலசலப்பை அதிகப்படுத்தியது. ஏனென்றால்... கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பிறந்தநாளை நெல்லையில் விமரிசையாகக் கொண்டாடியவர் விஜிலா சத்யானந்த்.
பாளையங்கோட்டை பிஷப் சார்ஜண்ட் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்திலுள்ள மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், இனிப்புகளும் கொடுத்து சசிகலாவின் பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜிலா சத்யானந்த். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா,
‘’டி.டி.வி. தினகரன் கட்டளையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட இந்த அரசு முழுமையாக 5 ஆண்டுகள் பூர்த்திசெய்யும். அதிமுக-வினர்கள் சின்னச்சின்ன குடும்பச் சண்டையில் ஈடுபட்டு பிரிந்துள்ளார்கள். விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து இரட்டை இலையை மீட்டு தேர்தலைச் சந்திப்போம். அதிமுக தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி. தினகரன் தலைமையை விரும்புகிறார்கள். அவரது தலைமையில் அதிமுக-வினர் ஒன்றிணைவார்கள். விரைவில் டி.டி.வி. தினகரன் தலைமை பொறுப்பேற்று நாளைய தமிழகத்தை வழி நடத்துவார்’’ என்று பேட்டி கொடுத்தார்.
இப்படி தன்னை 18ஆம் தேதி பக்காவான சசிகலா ஆதரவாளராக காட்டிக்கொண்ட விஜிலாதான், ஆகஸ்ட் 20ஆம் தேதி சபாநாயகர் தனபாலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வரவேற்று ஒண்டிவீரன் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்று அங்கே சபாநாயகரோடு சேர்ந்து அஞ்சலி செலுத்தினார்.
நெல்லை - பெங்களூரூ முடிச்சு
அதே நாளான நேற்று பகல் பெங்களூருவில் தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி, “இரட்டை இலை சின்னத்தை முடக்கிய ஓ,பன்னீர் அணியினருக்கு மந்திரி சபையில் இடம்தரக் கூடாது. வேண்டுமென்றால் இந்த அரசைக் காப்பாற்றிய 30 தலித் எம்.எல்.ஏ-க்களில் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம். ஏன் சபாநாயகர் தனபால் அவர்களைகூட அமைச்சர் ஆக்கலாம்” என்று பேசினார். நெல்லையில் தினகரனின் தீவிர ஆதரவாளர் விஜிலா, தனபாலை வரவேற்று அழைத்துச் செல்கிறார். அதேநேரம் தனபாலை மந்திரி ஆக்க வேண்டும் என்று தினகரன் கூடாரத்தில் இருந்து குரல் கேட்கிறது. இதை முடிச்சிட்டுப் பார்த்தால் தனபால் இப்போது தினகரன் ஆதரவாளராக இருக்கிறாரோ என்றே யூகிக்க முடிகிறது.
முதல்வரோடு முரண்பாடு
அதிமுக-வின் மிக மூத்த தலைவரான தனபால் 1977, 80, 84, 2001 தேர்தல்களில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனவர். 2011ஆம் ஆண்டு ராசிபுரத்தில் இருந்தும், 2016 தேர்தலில் அவினாசியில் இருந்தும் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
2001 அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தனபால், 2011 ஆட்சியிலும் தனக்கு அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், துணை சபாநாயகராக்கினார் ஜெயலலிதா. 2012இல் அப்போது சபாநாயகராக இருந்த ஜெயக்குமாரோடு தலைமைக்குப் பிணக்கு ஏற்பட்டதால் அவர் பதவி விலக... சபாநாயகரானார் தனபால்.
“2016-லும் அமைச்சர் பதவி எதிர்பார்த்தார் தனபால். இவர் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர்தான். அதன் விளைவாக சபாநாயகராக்கி, அமைச்சர் பதவிக்கு, ‘எந்த விதத்திலும் குறைவு இல்லாமல்’ இவருக்கு உரிய மரியாதையை அளித்து வந்தார் சசிகலா. ஓ.பன்னீர் அணி அதிமுக-வைப் பிளவுபடுத்தியபோது சட்டமன்றத்தில் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாத்ததில் சபாநாயகரான தனபால் சிறப்பாக ஜனநாயகக் கடமை ஆற்றியதாக அப்போதே தினகரன் தனபாலைப் பாராட்டினார். சிறையில் இருந்தபடி சசிகலாவும் தனபாலை பாராட்டியிருக்கிறார்.
அப்போது எடப்பாடியும் தினகரன் அணியில்தானே இருந்தார். இந்த நிலையில் இப்போது சபாநாயகர் தனபால், தினகரன் தரப்போடு தொடர்பில் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி பொதுவாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் தனபாலுக்கும் நீண்ட நாள்களாகவே சுமுக உறவு இருந்ததில்லை. இதற்கு கொங்கு சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உண்டு’’ என்றார் நம்மிடம் பேசிய கொங்கு அதிமுக பிரமுகர் ஒருவரே.
தலித் லாபி
‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவோம்’ என்று தினகரன் அணியினர் சில நாள்களாகத் தீவிரமாக பேசி வருகிறார்கள். ஏற்கெனவே தலித் எம்எல்ஏ-க்கள் ரகசிய கூட்டம் போட்டு விவாதித்து அது பெரும் பரபரப்பானது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா, தினகரனுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கும்பட்சத்தில் தலித் எம்.எல்.ஏ-க்கள் பலர் தினகரன் பக்கம் சாயக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தனபாலுக்குப் பின்னால் தலித் எம்.எல்.ஏ-க்கள் பலர் இருப்பதாகவும்கூட அதிமுக வட்டாரங்களில் சொல்கிறார்கள். சபாநாயகராக இருக்கும் தனபாலுக்குத் தன் கட்சி ரீதியாக எந்த அணியில் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க உரிமை இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் தனபால் பங்கெடுத்துக்கொண்டாலும், மெல்ல மெல்ல அவர் தினகரனின் எல்லைக்குள் வந்துவிட்டார் என்பதே அதிமுக-வில் பேச்சாக இருக்கிறது. சபாநாயகரே நம்பக்கம் என்று தினகரன் தரப்பினர் இப்போதே உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
“சின்னம்மா உத்தரவுப்படி இன்னும் பல ஆபரேஷன்கள் இருக்கின்றன’’ என்று தினகரன் சொன்னாரே... அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக