நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கினால் அவற்றில் தமிழ் கற்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நாடு முழுவதும் நடத்திவருகிறது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஜவஹர் நவோதயா பள்ளிகள் ஒன்றுகூட இல்லை. ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி என்பது உண்டு, உறைவிடப் பள்ளி. இப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. இங்கு கிராமப்புற மாணவர்களுக்கு, 75 சதவிகிதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் 600 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஏன், ஒரு பள்ளிகூட இல்லை என்று, நவோதயா வித்யாலயா சமிதி தலைவருக்கு மனு அனுப்பினேன். அவர், 'இப்பள்ளிகளைத் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை' என்று கூறினார். எனவே தமிழகத்திலும் இப்பள்ளிகளைத் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட மாட்டாது என்பதால் தமிழகத்தில் இப்பள்ளிகளைத் தொடங்கப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த மனு மீதான வழக்கு நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நவோதய பள்ளிகளில் இந்தி படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் மத்திய அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாநில மொழிகளுக்கே முதலிடம் அளிக்கப்படும் எனவும் தமிழகத்தில் தொடங்கப்பட்டால் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலுமே ஆரம்ப வகுப்பில் இருந்து கற்பிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
இது குறித்து, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக