அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தில் மசூதி இருக்கும் இடத்தை விட்டுக்கொடுப்பதாக ஷியா வக்ஃப் வாரியம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை எதிர்த்து இன்று ஆகஸ்ட் 9ம் தேதி சன்னி பிரிவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதால் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் பிறந்த இடமாக இந்துக்களால் நம்பப்படுகிறது. முகலாய மன்னர் பாபர் அங்கிருந்த ராமர் கோயிலை இடித்து மசூதி கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் ராமர் கோயிலை மீண்டும் கட்டுவோம் என்று பாஜக, விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல அமைப்புகள் போராடிவருகின்றன. நீதிமன்றத்திலும் அரசியல் அரங்கிலும் மக்கள் மத்தியிலும் நடைபெற்றுவந்த இந்தப் போராட்டம் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து விபரீதமான பரிமாணத்தை எடுத்தது. நாட்டில் பல்வேறு இடங்களில் மதக் கலவரங்கள் நடந்தன. மசூதி இடிப்பை ஒட்டி பாஜக தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டது. இவற்றுக்கிடையே அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கும் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அந்த வழக்கில்தான் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
ஷியா வக்ஃபு வாரியம் நேற்று (ஆகஸ்ட் 8) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில்,சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலைக் கட்டலாம் என்றும் குறிப்பிட்ட தொலைவில் இஸ்லாமியர் அதிகமாக வாழும்பகுதியில் மசூதியைக் கட்டலாம் எனவும் தெரிவித்துள்ளது. பாபர் மசூதி ஷியா வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்றநிலையில், இதில் சன்னி இஸ்லாமிய வாரியத்திற்கு எந்த பங்கும் கிடையாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ஷியா மத்திய வக்ஃபு வாரியத்திற்கு மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், மறு தரப்புடன் பேசி அமைதியான தீர்வை எட்டவும் உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஷியா மத்திய வக்ஃபு வாரியத்தின் தலைவர் வாஸிம் ரிஸ்வி கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ஷியா முஸ்லிம்களுக்குச் சொந்தமானது. பாபர் ஆட்சிக் காலத்தில், பாரசீகத்தைச்சேர்ந்த ஷியா கட்டுமானக் கலைஞரால் கட்டப்பட்டது தான் அந்த மசூதி.அதை, சன்னி பிரிவினர் தங்களது பெயருக்குமாற்றிக்கொண்டனர். இதை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதை மறு ஆய்வுசெய்யக் கோரியும், பாபர் மசூதி விவகாரத்தில் எங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரியும் நீதிமன்றத்தில் முறையிடஉள்ளோம்” என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்துதான், அயோத்தி விவகாரத்தில் ஷியா மத்திய வக்பு வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை எதிர்த்து சன்னி இஸ்லாமியப் பிரிவு வாரியம் இன்று(ஆகஸ்ட் 9) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், அயோத்தி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சன்னிபிரிவினர்தான் வழக்கை நடத்தி வருகின்றனர். அதனால், ஷியா பிரிவினரின் பிரமாணப் பத்திரத்தை ஏற்கக் கூடாதுஎன்றும் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள சன்னி பிரிவினருக்கு மட்டுமே உரிமை உள்ளதுஎன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷியா மற்றும் சன்னி பிரிவினரிடையே எற்பட்டுள்ள இந்த முரண்பாடு அயோத்தி விவகாரத்தில் மேலும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக