நாட்டையே சோகத்தில் மூழ்கச் செய்த 2004ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 9 பேரை இன்று (ஆகஸ்ட் 10) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004ஆம் ஆண்டு ஜூலை 16இல் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் தீக்காயம் அடைந்தனர். தீ விபத்துக்குக் காரணம் பள்ளி சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்து என்று கூறப்பட்டது. இந்த கோரச் சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த தீ விபத்து தொடர்பாக, பள்ளித் தாளாளர், விதிகளை மீறிப் பள்ளிக்கு அனுமதியளித்த கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியைகள், பள்ளி சமையல்காரர் உள்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணை முடிவடைந்த பின்னர், 2014ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், பள்ளித் தாளாளர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.51,65,700 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமியின் மனைவியும் பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, பள்ளி முதல்வர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி ஆகியோருக்குத் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த, அப்போதைய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கே.பாலகிருஷ்ணன், மாதவன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி) வி.பாலசுப்பிரமணியன், பள்ளி ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் எஸ்.சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் கே.முருகன் ஆகிய 11 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. முதுமை, உடல்நலப் பிரச்னை ஆகிய காரணங்களின் அடிப்படையில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பழனிசாமி உட்பட 10 பேர் பதில் மனு தாக்கல் செய்தனர். இதனிடையே சரஸ்வதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிதிபதிகள் சத்தியநாராயணா, வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதிகள் இந்த 9 பேரின் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர். இருப்பினும், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கில், கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 565 பக்க ஆவணங்கள் 229 சாட்சியங்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எந்தெந்த நபர்களுக்குத் தொடர்புடையவையாக இருக்கின்றன என்பது குறித்த சந்தேகங்களை நீதிபதிகள் எழுப்பினர். இதற்கு மனுதாரர்கள், அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தீர்ப்பு நாளை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி சமையல்காரரைத் தவிர மற்ற அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதில் சமையலர் வசந்திக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கீழமை நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களிடையே ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக