தமிழகத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்தது தொடர்பான விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்(30) என்பவர் கொல்லம் மாவட்டத்தில் பால் வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவருக்கு, சிகிச்சை வழங்க முடியாததால் மீண்டும் கேரள மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று, ஐந்து மருத்துவமனைகள் முருகனை சிகிச்சைக்கு அனுமதிக்காததால், அவர் ஏழு மணி நேரம் ஆம்புலன்சிலேயே அலைக்கழிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு, கொல்லம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு மருத்துவமனைகளுக்கு கேரள மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று ( ஆகஸ்ட்-10) கேரள சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்,' தமிழர் ஒருவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் இறந்தது மிகவும் வேதனையளிக்கிறது, அவர் இறந்தது கேரள மாநிலத்துக்கே அவமானம்' என்று தெரிவித்து முருகன் குடும்பத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் உறுதியளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக