அதிமுக தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக-வில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று ஆகஸ்ட் 1௦ஆம் தேதி காலை வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக-வின் இரு அணிகளையும் இணைப்பது குறித்து நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இரு அணிகளும் இணைப்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனை தொடர்பாக முக்கிய ஆலோசனை செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில், அதிமுக-வில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களைத் திரும்ப பெறுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளே அதிமுக-வை வழிநடத்திச் செல்கின்றனர். அதிமுக-வில் தினகரன் அறிவிப்புகள் செல்லாது என்றும் அது அதிமுக தொண்டர்களை கட்டுப்படுத்தாது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தினகரன் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியில் இல்லாததால் தினகரனின் நியமனம் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக-வில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து தகவலறிந்த சசிகலா, தினகரன் தரப்பினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் மதுசூதனன், நத்தம் விசுவநாதன் மனோஜ் பாண்டியன் மற்றும் செம்மலை ஆகியோருடன் ஓ.பி.எஸ். அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவையும், தினகரனையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அடுத்த கட்டமாக இரு அணிகள் இணைப்பு குறித்து தீவிரமாக ஆலோசனை நடைபெற்றதாகத் தெரியவருகிறது.
அதிமுக-வின் இரு அணிகளும் இணைந்தால் தான் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முடியும் என்ற நிலை இருப்பதால், இரு அணிகளும் இணையும் பட்சத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும், அவரது அணியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்க முதல்வர் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இதுகுறித்து, வரும் 15ஆம் தேதிக்குள் அதிமுக-வின் இரு அணிகளும் இணையும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த நிர்வாகி வெற்றிவேலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று காலை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக-வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக