தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் நேற்று (ஆகஸ்ட் 29 ) ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ, ‘ஊழியர்களைப் பாதிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். மாநில அரசின் எட்டாவது ஊதியக்குழு மாற்றங்களை, உடனடியாக கொண்டுவர வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்படி மாநில அரசின் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்முன், 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்’போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் இளங்கோவனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது, “முன்னர் அறிவித்தபடி செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அதன்படி, 7ஆம் தேதி வட்டாரத் தலைநகரங்களிலும் 8ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். 10ஆம் தேதி சென்னையில் கூடி மேற்கொண்டு எவ்வாறு போராட்டம் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக