சீனாவில் நடைபெறவுள்ள ஒன்பதாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்லவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையே எல்லையில் போர்ப் பதற்றம் நிலவிவந்தது. குறிப்பாக டோக்லாம் எல்லையில் சீனா சாலை அமைக்க முயன்றதால் பதற்றம் நீடித்தது. அப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவித்துவைக்கப்பட்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில் சீன அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து 5 வரை சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று (ஆகஸ்ட் 29) அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டோக்லாம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சீனப் பாதுகாப்புப் படையினர் திரும்பப் பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கும் தனியாகச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் சிறிய கைகுலுக்கலுடன் விடை பெற்றுக்கொண்டனர். எனவே, பிரதமர் மோடியின் இந்த சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பயணத்தில் இரு நாட்டு எல்லைப் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மூலம் முக்கிய முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனப் பயணம் முடிந்தபிறகு மியான்மர் அதிபர் யு ஹிதின் கியாவின் அழைப்பை ஏற்று செப்டம்பர் மாதம் 5 முதல் 7 வரை அங்கு பயணம் மேற்கொள்ளும் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியுடன் ஆலோசனை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக