திரும்பிப் பார்க்க வைத்த தமிழக பாஜகவின் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பாஜக கட்சியினர் நடத்தும் பேரணி, ஆர்பாட்டங்களுக்கு சில நூறு பேர் வந்தாலே அதிகம் என்ற நிலையே இதுவரைக்கும் இருந்துவந்தது. தமிழகத்தில் பாஜகவின் ‘பலம்’ தெரிந்த காரணத்தால்தான் மற்ற கட்சியினர் பாஜகவை ஒ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

திரும்பிப் பார்க்க வைத்த தமிழக பாஜகவின் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பாஜக கட்சியினர் நடத்தும் பேரணி, ஆர்பாட்டங்களுக்கு சில நூறு பேர் வந்தாலே அதிகம் என்ற நிலையே இதுவரைக்கும் இருந்துவந்தது. தமிழகத்தில் பாஜகவின் ‘பலம்’ தெரிந்த காரணத்தால்தான் மற்ற கட்சியினர் பாஜகவை ஒ


தமிழகத்தில் பாஜக கட்சியினர் நடத்தும் பேரணி, ஆர்பாட்டங்களுக்கு சில நூறு பேர் வந்தாலே அதிகம் என்ற நிலையே இதுவரைக்கும் இருந்துவந்தது. தமிழகத்தில் பாஜகவின் ‘பலம்’ தெரிந்த காரணத்தால்தான் மற்ற கட்சியினர் பாஜகவை ஒரு படி கீழேயே வைத்துப் பார்த்துவந்தனர்.

ஆனால், நேற்று (ஆகஸ்டு 7) சென்னையில் பேரணியாக அறிவிக்கப்பட்டு ஆர்பாட்டமாக மாற்றப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக பாஜக இளைஞரணியின் சார்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டது மற்ற கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும், தமிழக அரசுப் பள்ளிகளின்- பாடத் திட்டங்களின் தரம் உயர்த்த வேண்டும் ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை மையமாக வைத்து ஆகஸ்டு 7ஆம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகைப் பேரணி என்றுதான் தமிழக பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் அறிவித்தார்.

கடந்த ஒரு மாதமாகவே இதற்காகத் திட்டமிட்டு ஒவ்வொரு மாவட்டமாக சென்று பாஜக இளைஞரணியினரை சந்தித்து சென்னை பேரணியில் தமிழக பாஜகவின் பலத்தைக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இப்பேரணியை முழுக்க முழுக்க இளைஞரணியின் கையில் ஒப்படைத்திருந்தார்.

இந்தப் பேரணியை கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு பணி செய்தது தமிழக பாஜக இளைஞரணி. டெல்லி தலைமையும் இந்த சென்னை பேரணியை வெற்றிகரமாக நடத்த ஆலோசனைகளை வழங்கியது தெரியவந்துள்ளது.

பாஜக இளைஞரணியின் தேசியப் பொதுச் செயலாளரான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அபிஜத் மிஸ்ரா, பேரணிக்கு ஒரு வாரம் முன்னதாகவே தமிழகம் வந்து பல மாவட்டங்களில் ஆய்வு செய்தார். பேரணிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், கோட்டத்திலிருந்தும் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதைக் கணக்கெடுக்கும் பணிதான் அவரது ஆய்வில் முக்கிய அம்சமாக இருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆகஸ்டு 7 பேரணிக்கு எத்தனை வேன்கள் புக் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தி அதற்கான ஆவணங்களை தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அபிஜத் மிஸ்ரா.

இந்த அளவு துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி தமிழக பாஜகவுக்குப் பெரும் தெம்பைக் கொடுத்திருக்கிறது. சேப்பாக்கம் முதல் கோட்டைவரை பேரணி என்று அறிவிப்பை அடுத்து பாஜக இளைஞர்கள் சென்னைக்கு சாரிசாரியாகப் படையெடுத்தனர்.

ஆனால் காவல் துறையினரோ, “இதுவரை கோட்டை முற்றுகை போராட்டம் எதையும் நாங்கள் அனுமதிக்கவில்லை. எனவே உங்கள் பேரணியை ஆர்ப்பாட்டமாக மாற்றிக்கொள்ளுங்கள். கோட்டைக்கு உங்கள் பிரதிநிதிகள் மட்டும் சென்று முதல்வரிடம் மனு கொடுக்கலாம்” என்று சொல்லிவிட்டார்கள்.

முதலில் இதற்குச் சம்மதிக்காத பாஜக இளைஞரணியினர், பின் ஒருவழியாக அதை ஏற்றுக்கொண்டு சேப்பாக்கத்திலேயே ஆர்பாட்டமாக நடத்தினர். போலீஸ் கணக்குப்படி 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், ''கோவை, ஈரோடு மாவட்ட பாஜக இளைஞரணியினர் மட்டுமே இரண்டாயிரம் பேர் வந்திருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவினரைக் கணக்கெடுத்தால் மொத்தம் நான்காயிரம் பேரைத் தாண்டும்'' என்கின்றனர் பாஜக பிரமுகர்கள்.

எத்தனை ஆயிரம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கூட்டம் கொண்ட ஆர்ப்பாட்டத்தை இதுவரை தமிழக பாஜக நடத்தியதில்லை என்பதில் ஐயமில்லை.

ஆர்பாட்டத்தில் பேசிய பாஜக இளைஞரணி தேசிய செயலாளர் பூனம் மகாஜன், திமுகவையும் அதிமுகவையும் கடுமையாகச் சாடினார். “சூரியன் இப்போது மறைந்துகொண்டிருக்கிறது. இலை முடக்கப்பட்டு வாடிக்கொண்டிருக்கிறது. இனி தமிழகத்தின் ஒவ்வொரு முனையிலும் தாமரை மலரும். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு டிரையிலர்தான் மெயின் பிக்சரை இனி பார்ப்பீர்கள்’’ என்று உற்சாகமாகப் பேசினார் பூனம் மகாஜன்.

நிகழ்ச்சி பற்றி தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜிடம் பேசினோம்.

‘’தமிழக பாஜக வெற்றிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் செயலால் நிரூபித்துள்ளோம். எங்கள் காவித் தளபதிகள் அரும்பாடுபட்டுத் தமிழக பாஜகவுக்கும், மாநிலத் தலைவர் அவர்களுக்கும், இளைஞரணித் தலைவரான எனக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகத்துக்கு வரும் நிலையில் அவரைத் தலை நிமிர்ந்து வரவேற்க இருக்கிறோம்.

பேரணியின் அடிப்படை முழக்கங்களான உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் பாஜக இளைஞரணியினர் அங்கே கிடந்த வாட்டர் பாக்கெட் உள்ளிட்ட குப்பைகளைச் சுத்தம் செய்தது போலீஸாரையே வியக்க வைத்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here