1. பூமியைச் சூரியன் சுற்றி வருகிறது
2012ஆம் ஆண்டு 2,200 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, அமெரிக்கர்கள் விஞ்ஞான வளர்ச்சியில் மிகவும் ஆர்வம்கொண்டிருந்தது தெரிந்தது. குறிப்பாக, மருத்துவத் துறையில் அவர்கள் காட்டிய ஆர்வம் அதிகம். ஆனால், ஒரு கேள்விக்கான பதில் ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நான்கில் ஒருவர் பூமியை சூரியன்தான் சுற்றி வருகிறது என்று பதிலளித்துள்ளனர். சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட இதே போன்ற ஆய்விலும் பலரும் விண்வெளி பற்றிய அடிப்படை கேள்விகளுக்குத் தடுமாறினார். ஆனால், பரிணாம வளர்ச்சியில் சற்றே உஷாராக பதிலளித்தனர். ஆனால், அமெரிக்காவில் ஏறக்குறைய பாதி பேர், பரிணாம வளர்ச்சி எனும் கோட்பாட்டையே மறுத்துவிட்டனர். மனிதன் என்பவன் திடீரென தோன்றியவன் இல்லை. அவன் ஓர் அணு உயிரிலிருந்து வளர்ச்சியடைந்து வந்தான் என்பதை ஏற்கவும் மறுத்தனர்.
(source link: http://www.npr.org/sections/thetwo-way/2014/02/14/277058739/1-in-4-americans-think-the-sun-goes-around-the-earth-survey-says)
2. முன்னாள் அதிபர் ஒபாமா ஓர் இஸ்லாமியர்
பாரக் ஒபாமா, பதவியேற்றதிலிருந்தே பல சலசலப்புகள் வந்துகொண்டுதான் இருந்தன. அவர் அமெரிக்கர் இல்லை. எனவே, அவர் அதிபராக நீடிக்கக் கூடாது எனப் பலரும் குரல் கொடுத்தனர். ஆரம்பத்தில், அவர் அமெரிக்காவிலேயே பிறக்கவில்லை என கூறிவந்தனர். 2011ஆம் ஆண்டு அவர் தனது பிறப்புச் சான்றிதழை வெளியிட்டவுடன் அந்த வதந்தி அடங்கியது. ஆனால், அவர் ஓர் இஸ்லாமியர் எனும் வதந்திக்கு இது வித்திட்டது. அவர் தனது கிறிஸ்துவ நம்பிக்கையை அடிக்கடி வெளிப்படுத்தி வந்தாலும், இந்த வதந்தி அடங்குவதாக இல்லை. 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் இஸ்லாமியர் என நம்பும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(source link: https://www.washingtonpost.com/news/acts-of-faith/wp/2015/09/14/a-startling-number-of-americans-still-believe-president-obama-is-a-muslim/?utm_term=.77948f21bb73)
3. டைனோசாரும் மனிதர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்துள்ளனர்
ஆம். இப்படியும் சிலர் இருக்கின்றனர். 2015ஆம் ஆண்டு ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் வெளியானது. அப்பொழுது, ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்கள் வெளியாயின. தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து குளோனிங் முறையில்கூட டைனோசார்களை உருவாக்க முடியாது. இதை நான்கில் மூன்று பேர் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், மீதமிருப்பவர்கள் அதை ஏற்கவில்லை. குளோனிங் முறையில் டைனோசார்களை உருவாக்க முடியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையோடு உள்ளனர். இதே ஆய்வில், மனிதனும், டைனோசாரும் பூமியில் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் எனவும் நம்பும் பலர் இருந்தனர். ‘மறுபிறவி’ எடுத்துள்ளதாகக் கூறிக்கொண்டு திரியும் பலர், தாங்கள் முற்பிறவிகளில் டைனோசருடன் வாழ்ந்தது நினைவிருப்பதாக கூறுகின்றனர். கடைசியான டைனோசருக்கும், முதல் மனிதனுக்கும் எப்படியும் 6 கோடி ஆண்டு கால இடைவெளி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதும் கூடுதல் செய்தி.
(source link: https://today.yougov.com/news/2015/06/18/jurassic-world/)
4. பூமியின் வயது 10,000 ஆண்டுகள்
பூமியின் உருவாக்கத்தைப் பற்றிய அறிவியல் கருத்தொற்றுமையை அறிய ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில். பூமியும் அதிலிருக்கும் உயிரினங்களும் (மனிதன் உட்பட) அனைத்தும் இறைவனால் 6,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நேரத்தில் படைக்கப்பட்டதாக 40% மக்கள் நம்புகின்றனர். மீதமிருக்கும் 60% மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பூமியின் உருவாக்கத்தின் அறிவியல் கோட்பாட்டோடு பரிணாம வளர்ச்சியையும் இறைவனே நடத்தினார் என நம்புகின்றனர். மீதமிருப்பவர்களில் வெகு சிலரே, அறிவியல் கோட்பாடுகளை முழுமையாக ஏற்கின்றனர்.
(source link: https://www.livescience.com/46123-many-americans-creationists.html)
5. அமெரிக்க உள்நாட்டுப் போர், நாட்டின் உரிமைக்காக நடத்தப்பட்டது
அமெரிக்க உள்நாட்டுப் போர், கறுப்பினத்தவரை அடிமைப்படுத்துவதை எதிர்த்து நடத்தப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த ஆய்வறிக்கையின்படி, இந்த உள்நாட்டுப் போர், நாட்டின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்டது எனப் பலரும் நம்புவது தெரியவந்துள்ளது. பல பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் இதையேதான் வெளியிட்டும் உள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் நோக்கத்தையே கொச்சைப்படுத்தும் இந்தக் கோட்பாட்டை உண்மை எனவும், அதை ஆதரித்தும் பலர் பேசுவதே வேடிக்கை.
(source link: https://www.washingtonpost.com/posteverything/wp/2015/07/01/why-do-people-believe-myths-about-the-confederacy-because-our-textbooks-and-monuments-are-wrong/?utm_term=.58b7591b7e15)
6. ஓரினச் சேர்க்கை என்பது தேர்ந்தெடுக்கும் விஷயம்
இது எந்த இடமாக இருந்தாலும் சர்ச்சைக்குரிய ஒரு விவாதம். ஓரினச் சேர்க்கையாளராக ஒருவர் மாற, அவருக்குள் ஏற்படும் உயிரியல் மாற்றங்களே காரணம் என்பதற்குப் பல்வேறு சான்றுகளைப் பலரும் சமர்பித்துவருகின்றனர். ஆனால், 40% அமெரிக்கர்கள், அவர்கள் தங்கள் சொந்த விருப்பங்களால்தான் அப்படி வாழத் தேர்வு செய்கின்றனர் என்று நம்புகின்றனர். இன்னும் சிலர், அவர்களின் வளர்ப்பால் அவர்கள் அப்படி மாறி இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். வெறும் 40% மக்களே ஓரினச் சேர்கைக்குப் பின்னால் இருக்கும் அறிவியலை ஆராய்ந்து ஒப்புக்கொள்கின்றனர்.
(source link: http://www.pewresearch.org/fact-tank/2015/03/06/americans-are-still-divided-on-why-people-are-gay/)
7. விளையாட்டுப் போட்டிகளில் கடவுள் தலையீடு
ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இறை வழிபாடு/பிரார்த்தனையைக் கட்டாயமாக்க வேண்டும் என்று சுமார் 70% பேர் கூறியுள்ளனர். மத வேற்றுமையின்றிப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் இதை ஆமோதித்துள்ளனர். சிலர் ஒருபடி மேலே சென்று, இறை நம்பிக்கையுள்ள விளையாட்டு வீரர்கள், மிகவும் ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள் என்றும், அவர்களின் திறன் பல மடங்கு அதிகமாக இருக்குமென்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் ஓர் அணியின் வெற்றியை இறைவனே தீர்மானிக்கிறான் என்றும் கூறுகின்றனர்.
(source link: https://www.prri.org/research/january-2013-tracking-poll-2/)
8. 9/11 தாக்குதலின் பின்னணியில் சதாம் ஹுசேன்
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உலக வர்த்தக மைய தகர்ப்பு, சதாம் ஹுசேனால் நடத்தப்பட்டது என்று பல அமெரிக்கர்கள் கருதுகின்றனர். அல் கொயிதா, பின்லேடன் எனப் பல ஆதாரங்களை அமெரிக்க அரசு சமர்ப்பித்த பிறகும், சதாம் ஹுசேனே அந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகக் கருதுகின்றனர்.
(source link: https://usiraq.procon.org/view.answers.php?questionID=000864)
9. அலெக்சாண்டர் ஹேமில்டன், பெஞ்சமின் பிராங்க்ளின் அதிபர்களாக இருந்தனர்
அலெக்சாண்டர் ஹேமில்டன் அமெரிக்காவை நிறுவுவதில் பெரும் பங்கு கொண்டவர். நியூயார்க் வங்கியையும் நிறுவியவர். ஆனால், அதிபராக அவர் பதவி வகித்ததில்லை. இது ஏனோ 71% மக்களுக்குத் தெரியவில்லை. வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கலந்துகொண்டவர்களிடம் 123 பெயர்களைக் கொடுத்து அதிலிருந்த 41 அதிபர்களின் பெயரைத் தேர்ந்தெடுக்க வைத்தனர் பெரும்பகுதியினர், அலெக்சாண்டர் ஹேமில்டனைத் தேர்ந்தெடுத்தனர். ரூபாய் நோட்டுகளில் அவரது முகம் இருப்பதால் இந்த குழப்பம் நேர்ந்திருக்கலாம். இதே போல பெஞ்சமின் பிராங்க்ளினையும் முன்னாள் அதிபர் எனப் பலரும் தேர்ந்தெடுத்தனர்.
(source link: http://www.latinpost.com/articles/114710/20160212/survey-says-majority-of-americans-think-alexander-hamilton-was-a-former-president.htm)
10. இனவெறி அழிந்துவிட்டது
கறுப்பினத்தவருக்கு எதிரான இனவெறி குறைந்துள்ளது ஒப்புக்கொள்ள வேண்டியதே. ஆனால், அது முற்றிலும் அழிந்துவிடவில்லை. இருந்தாலும் பல அமெரிக்கர்கள், கறுப்பினத்தவருக்கு எதிரான பாகுபாடுகள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும். அவர்கள் அனைவருடனும் சமமாக இருப்பதாகவும் கருதுகின்றனர். மேலும் சிலர், வெள்ளையர்களுக்கு எதிரான இனவெறி தொடங்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.
(source link: https://www.channel4.com/news/factcheck/how-many-americans-dont-believe-racism-is-a-problem-in-the-us-four-graphs-that-explore-race-in-america)
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக