மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அதன் படி 2007ம் ஆண்டு பணப்பயன் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.
7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவசர அவசரமாக இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. அப்போது ஊதியத்தில் முரண்பாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதனால் 2008-2009ம் ஆண்டு ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்து அதில் குறைகளை களைய அரசுச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையின் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் திருப்தி ஏற்படாத நிலையில் கிருஷ்ணன், உதயசந்திரன் ஆகியோர் அடங்கிய 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ஊதிய முரண்பாடுகள் குறித்து முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஊதிய பிரச்னைகள் நீடித்து வந்தது. இதையடுத்து, நிதித் துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கோரிக்கைகளை அந்த குழு கேட்டுவாங்கியது. ஆனால், இதுவரை பரிந்துரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்கிடையே, பழைய ஓய்வு ஊதியத்தை கொண்டு வருதல், தொகுப்பு ஊதியம், தற்காலிக பணியில் வேலை செய்வோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று அதை அமல்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் உச்சக்கட்டமாக தொடர் வேலை நிறுத்தத்தையும் செய்தனர். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி, தமிழகமே பெரும் போர்க்களம் போல மாறியது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஜாக்டோ-ஜியோவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று நவம்பர் 30ம் தேதிக்குள் அந்த பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் மதுரையை சேர்ந்த சேகரன் என்ற வக்கீல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஜாக்டோ-ஜியோவினர் தெரிவித்த கருத்துகளை ஏற்ற நீதிமன்றம் அரசு தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
இதன்படி கடந்த 15ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, வரும் 30 ம் தேதிக்குள் சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய ேவண்டும் என்று நீதி மன்றம் தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்துள்ளார்.
கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தும் தேதியை கோர்ட்டில் அக்டோபர் 13 ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை கூறியிருந்தது; இதன்படி, கோர்ட்டில் தேதியை அறிவிக்கும் என்றும் புதிய சம்பள விகிதத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் அமல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமல்படுத்தினால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் வரை ஊதியம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக