ஜாக்டோ-ஜியோ 9 நாட்கள் போராட்டம் ஒரு வரலாறு ஒர் ஆசிரியரின் அனுபவம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஜாக்டோ-ஜியோ 9 நாட்கள் போராட்டம் ஒரு வரலாறு ஒர் ஆசிரியரின் அனுபவம்

✅✅✅✅ *பகுதி - 1*                        *முதல் கைதும்,ஒன்பது நாள் போராட்டமும்*

                         நண்பர்களே , முதன் முறையாக கடந்த மாதம் நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றேன்.முதன் முறையாக போராட்டத்தில் பங்கு பெற போகும் நினைவை எண்ணி ஆச்சிரியத்தில் இருந்தேன்.என்னுடன் எனது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டம் என்று சொன்னார்கள் .அங்கு நான் கண்ட காட்சிகள் என்னை போராட்ட உணர்வுக்கு அழைத்து சென்றது.போராட்டம் தொடர்பான கோஷங்கள் என்னை ஈர்த்தன.அதுவே எனது முதல் வேலை நிறுத்த போராட்ட அனுபவம் ஆகும்.

போராட்டத்தில் பங்கு பெறுவதற்கு முன்பான பரபரப்பான நிமிடங்கள்

                               மீண்டும் சில நாள் கழித்து தொடர் போராட்டம் அறிவித்தன சங்கங்கள்.ஆனால் அதில் சில சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை என போராட்டம் நடைபெறும் நாளுக்கு முன்னதாக  மாலை தீடீரென அறிவித்தன.எங்கள் பள்ளி ஆசிரியர்களும் ,நாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்தோம்.

பையில் துண்டு ,லுங்கியுடன் ஒரு பயணம்

                       மறுநாள் காலை சுமார் 10 மணி அளவில் தேவகோட்டை தியாகிகள் பூங்கா முன்பாக அனைவரும் கூடுவது என்று முடிவு செய்தோம்.மறுநாள் மறியல் என்பதால் எப்படி அதற்கு நம்மை தயார் செய்து கொள்வது என்று ஆர்வமாக அனைவரிடமும் கேட்டேன்.தோழர் சுப்பிரமணியன் அவர்களும்,தோழர் புரட்சி தம்பி,தோழர் சிங்கராயர் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை எனக்கு சொன்னார்கள்.மறியல் செய்து கைது ஆகும்போது ஒரு பையில் லுங்கி,தண்ணீர் ஒரு பாட்டிலில் எடுத்து கொள்ளுங்கள் என்பது போன்ற தகவல்களை சொன்னார்கள்.மேலும் ஒரு துண்டும் எடுத்து வரச்சொன்னார்கள்.நானும் அனைத்தையும் எடுத்து கொண்டு சென்றேன்.

கைதாவதற்கு முன்பு ஒரு படபடப்பு :

                               நாங்கள் அனைவரும் பெரும் கூட்டமாக தேவகோட்டை நகராட்சி எதிரில் கூடினோம்.எனக்கு மனதுக்குள் ஒரு இனம் புரியாத படபடப்பு.எதற்கு? கைது செய்து எங்கு சென்று காவலில் வைப்பார்கள் என்று.ஏனென்றால் பல முறை காவல் நிலையம் சென்றாலும் கைது செய்து எப்படி நடத்துவார்கள் என்று ஒரு படபடப்பு.

                                           அனைவரும் ஒன்றாக கூடி எங்களது உரிமை தொடர்பாக கோஷங்கள் எழுப்பினோம்.சில தோழர்கள் உணருவப்பூர்வமாக பேசினார்கள்.அப்போது காவல் துறை நண்பர்களும் எங்களுடன் நன்றாக பேசி கொண்டார்கள்.சில நிமிடங்கள் கழித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தேவகோட்டை நகராட்சி முன்பாக உள்ள சாலையில் மறியல் செய்தோம்.நடுரோட்டில் அனைவரும் அமர்ந்தோம்.எந்த நேரமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த சாலையில் நாங்கள் நடுரோட்டில் அமர்ந்தது எனக்கே சில நிமிடங்கள் இது உண்மைதானா என்று எண்ண தோன்றியது.ஆனாலும் அனைவரும் அமர்ந்து கோஷமிட்டோம்.

முதல் கைது

               இரண்டு நிமிடங்களில் காவல் துறை ஆணையாளர் எங்களிடம் வந்து நீங்கள் மறியல் செய்வதால் உங்களை கைது செய்கிறோம் என்று அன்பாக சொல்லி ,எங்களுடன் வந்த பெண்களை வேனில் ஏற்றினார்கள்.எங்களை நடந்தே அழைத்து சென்று அருகில் உள்ள இளங்கோ மண்டபத்தில் சிறைப்படுத்தி தங்கவைத்தனர்.முதல் கைது அதுதான் எனக்கு.என்னுடன் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேரும் கைதாகி உள்ளே இருந்தனர்.அங்கு எங்களுடன் சத்துணவு ஊழியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் என அதிகமானோர் இருந்தனர்.

அனைவருடனும் பழகும் வாய்ப்பு :

                                             நான் கைதாகி மண்டபத்தின் உள்ளே செல்லும்போது ஒரு எஸ்.ஐ .(காவலர் ) என்னை பார்த்து அன்புடன் சிரித்தார்.சார் நன்றாக உள்ளீர்களா என்று கேட்டார்.நானும் பொதுவாக பதில் சொல்லி விட்டு வந்தேன்.பிறகு சில நிமிடங்கள் தாண்டி காவலர்கள் எங்களை வழக்கு பதிவு செய்வதற்காக அழைத்தனர்.நான் முதல் ஆளாக சென்று எனது விவரங்களை வழங்கினேன்.அந்த காவலர் அன்புடன் என்னிடம் விசாரித்து குறித்து கொண்டார்.பிறகு சக ஆசிரியர் தோழர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன்.அரசு மருத்துவமனை ஊழியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள்,பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள்,சத்துணவு ஊழியர்களின் அமைப்பு தலைவர்கள்,வட்டாட்சியர் அலுவலக தோழர்கள் அனைவருடனும் பேசும் அருமையான வாய்ப்பு கிடைத்தது .அனைவரும் அன்புடன் பழகினார்கள்.

பள்ளியின் சிறப்பை சொன்ன எஸ்.ஐ.

பிறகு சிறிது நேரம் கழித்து என்னை முதலில் வரவேற்ற எஸ்.ஐ.அவர்களின் நினைவு வந்தது.அவர் யார் என்ற நினைவு வந்ததும்,அவரிடமே சென்று சார்,உங்களை டிஸ்பி அலுவலகத்தில் யூனிபார்ம் இல்லாமல் பார்த்து உள்ளேன்.இப்போதுதான் உங்களை அடையாளம் தெரிந்தது என்று சொன்னதும் அவர் என்னிடம்,சார் ADSP திரு.கருப்பசாமி அவர்கள் உங்களை பற்றி அதிகமாக நல்ல முறையில் சொல்லி உள்ளார்.நானும் நீங்கள் பணியாற்றும் பள்ளியில் தான் சார் படித்தேன்.அங்கு படித்ததால்தான் இன்று இந்த பணியில் உள்ளேன் என்றும்,அவர் படித்த காலத்தில் உள்ள ஆசிரியர்கள் தொடர்பாகவும் என்னிடம் மனம் விட்டு பேசினார்.தற்போது நாங்கள் பள்ளியில் செயல்படுத்தி வரும் பல்வேறு நிகழ்வுகளை சுட்டி காட்டி ,இப்போது படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக பிற்காலத்தில் மிகப்பெரிய ஆளாக வருவார்கள் என்றும் பாராட்டி பேசினார்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.அவரிடம் இருந்து விடை பெற்று சக ஆசிரியர்களுடன் பேச ஆரம்பித்தேன்.

அன்பான மதிய உணவு :

                        மதியம் எங்களுக்கு அருமையான மதிய உணவு வழங்கப்பட்டது.காவலர்கள் அன்புடன் அதனை எங்களுக்கு வழங்கினார்கள்.ஒரு லெமன் ,ஒரு தயிர் பொட்டலம் வழங்கப்பட்டது .பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம்.

பயிற்சி பணிமனை :

                                              பிறகு மதியம் 3 மணியை போல் அனைத்து ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களை அமரவைத்து போராட்டம் எவ்வாறு செய்வது,என்ன செய்யலாம் ,முன்பு உள்ள போராட்ட காலங்கள் குறித்து மிக அருமையாக தோழர்கள் சுப்ரமணியன்,புரட்சி தம்பி,மாணிக்க வாசகம் ஆகியோர் பேசினார்கள்.எங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக எனக்கு பாராட்டு தெரிவித்துதுடன் என்னையும் பேச வைத்தனர்.சத்துணவு அமைப்பாளர்கள் தலைவர் பேசும்போது அவர்களின் சம்பளம் தொடர்பாகவும்,சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளர்களை கண்டிப்பாக பணிக்கு அழைப்பது தொடர்பாகவும் பேசியது சிறிது மனதுக்கு வருத்தமாக இருந்தது.பிறகு மாலை 6 மணி ஆகிவிட்டது.

எப்போது சிறையிலிருந்து விடுவார்கள் ?

                    எங்களுடன் மண்டபத்தில் இருந்த பலருக்கு இது போன்று சிறையில் இருப்பது இதுவே முதல் முறை என்பதால் எப்போது விடுவிப்பார்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.பிறகு 6.10 மணியை போல் எங்களுடன் இருந்த அனைவரும் கோஷமிட்டனர்.அதன் பிறகு மாலை சுமார் 6.30 மணி அளவில் எங்களை விடுதலை செய்தனர்.

நண்பரின் பாராட்டு :

                             தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள ஆசிரிய சங்க தலைவர் ஒருவர் விடுதலையாகி வெளியில் வந்த உடன் ,எனது கையை பிடித்து சார் வாழ்த்துக்கள்.உங்களை என்னவோ நினைத்து இருந்தோம்.நீங்கள்   போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக எங்களது வாழ்த்துக்கள்.அடிக்கடி இது போன்று சந்திப்போம் சார்.மகிழ்ச்சி என்று சொன்னார்.

முதல் கைது - விடுதலை அனுபவம் :

                                             முதன்முதலில் கைதாகி உள்ளே இருக்கும்போது சில ஆசிரிய நண்பர்கள் ,நாங்கள் லேட்டாக வந்தோம் எங்களையும் உள்ளே வையுங்கள் என்று மண்டப வாசலில் கேட்டு கொண்டனர்.ஆனால் காவல் துறை நண்பர்களோ ,இல்லை மறியலில் ஈடுபட்டால் மட்டுமே வைக்க முடியும்.இல்லை என்றால் வீட்டுக்கு செல்லுங்கள் எண்டு சொல்லி விட்டனர்.இதுவே எனக்கு புது அனுபவமாக இருந்தது.யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியாது.கைதாகி உள்ளே உள்ளவர்கள் கடைசி வரை அங்கேயேதான் இருக்க வேண்டும்.யாரும் புதிதாக உள்ளே வரமுடியாது என்கிற தகவலை தெரிந்து கொண்டேன்.மேலும் கைதாகி உள்ளே உள்ளவர்களை மாலை 6 மணிக்கு மேல் மண்டபத்தில் வைத்து கொள்ள இயலாது என்பதும்,அதற்கு மேல் உள்ளே வைப்பது என்றால் சிறைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் , அதிகமான எண்ணிக்கையில் உள்ள நண்பர்களை சிறைக்கு அழைத்து சென்றால் அவர்களுக்கு செலவு அதிகமாகும் என்பதால் மாலை 6.30 மணிக்கெல்லாம் விடுவித்து விடுவார்கள் என்றும் தோழர்கள் சொல்ல அறிந்து கொண்டேன்.இது எனக்கு புதிது.நான் அனைத்துக்கும் தயாராகவே சென்றேன்.பையில் லுங்கி,துண்டு என அனைத்தும் வைத்து இருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இரவு விடுவித்துவிடுவார்கள் என்பது நன்றாக தெரிந்தது.

உணர்ச்சி பொங்கும் கோசம் கேட்ட இரண்டாம் நாள் :

                                                     இரண்டாம் நாள் மறியல் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக என்று அறிவிக்கப்பட்டது.4,000துக்கும் அதிகமானோர் அங்கு கூடினோம்.சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் பொறியாளர்,தோழர்  செல்வகுமார் அவர்கள் மிக அருமையாக ,உணர்ச்சி பொங்க கோஷமிட்டு ,எங்களையும் உற்சாகப்படுத்தினார்.நீண்ட நேரம் அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி அருமையாக கோசம்  எழுப்பினார் . அது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.மறியல் என்பதை தீடீரென மாற்றி ஆர்பாட்டத்துடன் முடித்து விட்டனர்.அப்போது பல ஆசிரியர்கள்  தங்காள் சார்ந்திருக்கும் சங்கங்கள் மறியலுக்கு போகவேண்டாம் என்று சொன்னாலும் அதை தகர்த்தெறிந்து போராட்டத்திற்கு வந்து பங்கு பெற்றனர்.வேம்பத்தூர் என்கிற பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியர் பள்ளியை திறந்த பின்பு ,திடீர் மனமாற்றத்தின் காரணமாக பங்கு பெற்றதாக ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.அன்று கல்லூரி பேராசிரியர்கள்,அங்கன்வாடி ஊழியர்கள்,சத்துணவு அமைப்பாளர்கள் என பெரிய அளவில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.மாலை ரயில் மூலமாக வீட்டிற்கு வந்தோம்.

ஐந்தாம்  நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் :

                                          மிக பெறும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டத்தில் போராட்ட குழுவினர் பங்கேற்றனர்.இன்றும் தோழர் செல்வகுமார் அருமையாக கோசம் போட்டார்.

ஆறாம்  நாள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் :

                                          இன்று மிக பெரிய அளவில் தன்னெழுச்சியாக பல சங்கங்கள் போராட்டத்தில் பங்கு பெற்றனர்.கலெக்டர் அலுவலகம் முன்பாக எங்கு பார்த்தாலும் போராட்டக்காரர்கள்.தோழர் ,வட்டாட்சியர் தமிழரசன் மிக அருமையாக போராட்டம் குறித்து விளக்கினார்.பிறகு தோழர் செல்வகுமார் முந்தின நாளை விட அருமையாக கோசம் எழுப்பினார் .தீடீரென மழை வந்து விட்டது.சுமார் 1600 பேர் கைதாகி மாயா மற்றும் ஆர்.கே.ஆர் மகாலில் தங்க வைக்கப்பட்டோம் .மதியம் சாப்பாடு வர தாமதம் ஆகிவிட்டது.பிறகு ஒரு வழியாக தயிர் சாதமும் ,ஊறுகாயும் வழங்கப்பட்டது.வழக்கம்போல் காவலர்களால் எனது பெயர் பதியப்பட்டு கையெழுத்து வாங்கப்பட்டது.

                          இங்கு புதிய பென்ஷன்   திட்டம் தொடர்பாக மிக தெளிவாக விளக்கப்பட்டது.அரசின் பல்வேறு திட்டங்கள் எப்படி உள்ளது என்றும் விளக்கப்பட்டது.அனைத்தும் புதிய அனுபவங்கள் .தோழர் சிங்கராயர் பேசும்போது மிக தெளிவாக பழைய ஓய்வு ஊதியம் கண்டிப்பாக செயல்படுத்த உள்ள நிலையை விரிவாக விளக்கினார்.அதனை கேட்கும்போதே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

                                  பிறகு மாலை சுமார் 6.45 மணி அளவில் விடுதலை ஆகி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

மாட்டு வண்டி ஓட்டிய வட்டாட்சியர் :

                                                                 ஏழாம் நாள் போராட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டு அங்கு அனைத்து தோழர்களும் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.பெரும்பான்மையான பெண் தோழர்கள் போராட்டத்தில் பங்கு பெற்றனர்.காலையில் ஆரம்பிக்கும்போது நல்ல மழை பெய்தது.அதனையும் தாண்டி தோழர்கள் மழை வராத வண்ணம் ஏற்பாடுகள் செய்து நல்ல முறையில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்தினார்கள்.காத்திருப்பு போராட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் அனைத்து மீடியாக்களும் தீடிரென ஓடினார்கள்.என்ன,ஏது என்று பார்த்தால் ,தோழர் வட்டாட்சியர் தமிழரசன் 58 வயதுக்கு பிறகு பென்சன் இல்லை என்றால் ,கண்டிப்பாக மாட்டு வண்டி ஓட்டவேண்டிய நிலைக்கு அரசு ஊழியர்கள் தள்ளப்படுவார்கள் என்பதை மாட்டு வண்டி ஓட்டி வந்து,கோஷமிட்டு தீடீர் பரபரப்பை ஏற்படுத்தினார்.போராட்ட களத்தில் போன்று நூதன முறைகளை கையாள்வது அருமையான நிகழ்வு.வாழ்த்துக்கள் தோழற்கு.அன்று இரவு காவல் துறையினர் அங்கு தங்கியிருந்தவர்களை கைது செய்து பிறகு சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர்.இரவு முழுவதும் யாரும் உள்ளே காத்திருப்பு போராட்டத்தில் தங்க விடமால் தடை செய்தனர்.

                                   அன்று மதியம் நமது தோழர்கள் வந்திருந்த கூட்டத்தை பார்த்து பாராட்டி அனைவரும் குறைந்தது ரூபாய் 100ம்,அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம் என்றும் சொல்லி துண்டு ஏந்தி வந்தனர்.அதனில் சுமார் 68,000 ரூபாய் வசூல் ஆனது.அருமையான மதிய உணவு தயார் செய்தனர்.நன்றிகள் போல.

நூறு நாள் வேலை வாய்ப்பு ஊழியர்களாக மாறிய அரசு ஊழியர்கள் :

                                            எட்டாம் நாள் போராட்டத்தின் போது மிக அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும்,வருவாய் துறை அலுவலர்களும்,கருவூலத்துறை அலுவலர்களும் ,கிராம நிர்வாக அலுவலர்களும் பங்கேற்று அனைவரையும் மகிழ்ச்சிக்கு உட்படுத்தினார்கள்.முதல் நாளை விட மிக அதிக எண்ணிக்கையில் போராட்டம் வலுப்பெற்றது.கண்ணங்குடி ஒன்றியத்தில் இருந்து ஆசிரியர் சார்லஸ் கண்ணன்,ராஜா ஆகியோர் ஏற்பாட்டில் 13 பெண் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு மாற்று சங்கத்தில் இருந்து வந்து பங்கேற்றனர்.

                               காத்திருப்பு போராட்டத்தின் நடுவே தீடீரென அரசு ஊழியர்கள் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களாக மாறி ,58 வயதுக்கு பின்பு அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் பென்ஷன் இல்லாமல் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று விரிவாக விளக்கினார்கள்.

 ஆச்சிர்யப்படுத்திய உணவு :

                               கூடியிருந்த அனைவரும் நல்ல முறையில் சாப்பிடும் வகையில் மதியம் அருமையான உணவு தயாரிக்கப்பட்டது.அனைவரும் பொறுமையுடன் வரிசையில் நின்று தக்காளி சாதமும் ,தயிர் சாதமும் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கும் வாங்கி சாப்ப்பிட்டோம்.அருமையான மதிய உணவு.இங்கு ஆச்சிரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் ஒரு கல்யாணம் செய்து சாப்பாடு போடுவதே மிகவும் சிரமமான விஷயம்.ஆனால் எத்துணை பேர் வருவார்கள் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாத நிலையிலும் அனைவருக்கும் உணவு அறுசுவையுடன் தயார் செய்து அதனை வேண்டும் அளவிற்கு வழங்கி இன்முகத்துடன் உணவு பரிமாறினார்கள்.வாழ்க அவர்களின் உணர்வு பூர்வமான இயக்க பணிகள் .

காவல் துறையின் மிரட்டல் :

                               நாங்கள் போராடுவது காவல் துறைக்கும் சேர்த்துதான் என்று தெரிந்திருந்தும் அவர்கள் அதிகமான காவல் வண்டிகளை  கொண்டு வந்து நிறுத்துவதும், தீடீரென அனைவரும் அணிவகுத்து நிற்பது என மீண்டும்,மீண்டும் அதையே செய்து கொண்டு இருந்தனர் .அதற்கெல்லாம்  போரட்டக்குழு பயப்படவில்லை.உண்மையில் சொல்லவேண்டும் என்றால் இபோது எங்களை கைது செய்வார்கள் என ஆவலுடன் முழுக்கூட்டமும் இருந்தனர்.ஆனால் அன்று இரவு வரை யாரையும் கைது செய்யவும் இல்லை.

                   

கூட்டத்தினரை ஆர்வப்படுத்திய கலைஞர்கள் :

                                                     தேவகோட்டை மகாராஜன் தோழர் மிக அருமையாக தோழர் மணிமாறன் அவர்களுடன் இணைந்து போராட்ட கோரிக்கை குறித்து சிரிக்க ,சிந்திக்க விளக்கினார்.இதனை போலீஸார் அனைவரும் ஒன்றாக கூடி

ஆர்வத்துடன் சிரித்து ,சிரித்து  கேட்டு மகிழ்ந்தனர்.நாங்களும் மிகவும் மகிழ்ந்தோம்.மாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தோழர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தனர்.இரவு சத்துணவு அமைப்பாளர் குழுவினர் மிக அருமையான நிகழ்ச்சியை வழங்கினார்கள்.

ஒன்பதாம் நாள் :

                                நிறைவு நாள் அன்று நான் ஒரு விசேசம் முடித்து சொல்லலாம் என்று இருந்தேன்.அப்போது சுமார் 10 மணி அளவில் எனது பள்ளி ஆசிரியை ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ,சார் 20 பேர்தான் பந்தலில் இருந்தோம்.எங்களை கைது செய்து அழைத்து செல்கின்றனர்.எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது என்றார்.நான் சொன்னேன்,ஒன்றும் பயம் இல்லை.உங்களை கைது செய்தாலும் பயப்பட வேண்டாம்.நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் கைதாகி உள்ளே வந்துவிடுவேன்.தைரியமாக இருங்கள் என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.சிறிது நேரத்தில் அந்த ஆசிரியை எனக்கு போன் செய்து ,சார் நான் கைதாகி என்னுடைய பெயர் எழுதி கையெழுத்து போட  சொன்னார்கள் .போட்டு விட்டேன் என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.

போராட்டம் முடிந்து விட்டதாக தீடிர் பரபரப்பு :

                                                   நான் மதியம் 11.30 மணியளவில் ரஸ்தா ரயில் நிலையம் சென்றபோது,ஒரு ஆசிரியை இன்னொரு ஆசிரியரிடம் சொன்னார்கள் ,டீச்சர் போராட்டத்தில் காலையில் நிறைய ஆசிரியைகளை கைது செய்து விட்டார்களாம் . அதற்கு அந்த ஆசிரியை சொல்கிறார்,சும்மா மிரட்டாதீங்க ,நேற்றுதான் அவர்கள் சும்மா போலீஸ் வண்டியை காட்டி பூச்சாண்டி காட்டினார்கள்.சும்மாதானே சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள்.அதற்கு முதலில் சொன்ன ஆசிரியை ,இல்லை உண்மையில் கைது செய்து விட்டார்கள் என்று சொன்னார்கள் .அப்படி என்றால் நாம் இப்படியே வீட்டுக்கு சென்று விடுவோமா என்று கேட்டார்கள்.அதற்கு நான் சொன்னேன்,பயம் இல்லை டீச்சர், தைரியமாக வாருங்கள்.என்னதான் சொல்கிறார்கள் என்று பார்த்து விட்டு வருவோம் என்று சொல்லி அவர்களையும் எங்களுடன் ரயில் ஏற்றினோம்.

                                          பிறகு ரயில் வந்து விட்டது.தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள ஒரு ஆசிரியரும்,ஆசிரியையும் ரயிலில் கால் வைக்கப்போகும் தருவாயில் ,சார்  இரண்டு மணிக்குள் பணியில் சேர சொல்லி உத்தரவு வந்துள்ளதாக அறிந்தோம்.ரயிலில் ஏறுவோமா?வேண்டாமா?என்று கேட்டனர்.நான் அவர்களிடமும் , யாரோ ஏமாற்றுகிரார்கள்.நம்பாதீர்கள்.ஏறுங்கள் வண்டியில் என்று சொல்லியேற்றிவிட்டேன்.பிறகு பல்வேறு தகவல்களுடன் நாங்கள் மாவட்ட ஆட்சியரகம் சென்று அங்கு இருந்த காவல் வண்டியின் வழியாக ஆர்.டி.எம்.கல்லூரியினை அடைந்தோம்.

இருபது,நானுற்றி ஐம்பது ஆனது எப்படி ?

                                  எங்கள் பள்ளி ஆசிரியரின் தகவலின் படி காலையில் 10 மணி அளவில் கைது ஆனவர்கள் சுமார் 20 நபர்கள் மட்டுமே.அவர்களையும் காவல் துறை உணவு சாப்பிட விடாமல் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்து உள்ளனர்.அங்கு இருந்த பந்தல் அனைத்தயும் கலைத்து விட்டனர்.இது அராஜகம் என்று தான் சொல்ல வேண்டும்.யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் அமைதியான முறையில் போராட்டம் எய்து கொண்டிருந்த தோழர்களை கைது செய்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.

                          ஆனால் சில மணி நேரங்களில் தகவல் கேள்விப்பட்ட பல நூறு ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் தன்னிச்சையாக காவல் வாகனத்தில் ஏறி கைது ஆகி அங்கு சென்று விட்டனர்.காலையில் இருபது கைது.ஆனால் மதியம் ஒரு மணி அளவில் சுமார் 450 பேர் கைது ஆகி விட்டனர்.பிறகு மாநில தலைமையின் முடிவின்படி அனைவரும் சுமார் இரண்டு மணி அளவில் அங்கு இருந்து கிளம்பி பணிக்கு சென்றோம்.

                                         எங்கள் பள்ளி ஆசிரியை மற்றொருவரும் ஆர்வமாக இந்த கைதில் கலந்து கொண்டு காவல் வேனில் சென்று உள்ளே இருந்தார்.

                        இந்த போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது.இந்த போராட்டத்திற்கு யாரும் சென்று அழைக்கவில்லை.அணைத்து சாராரும் அவர்களாகவே சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

                             இந்த போராட்டம் எனக்கு புதிய ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளது.இதன் தொடர்ச்சியான பகுதி இரண்டில் இன்னும் அதிகமான தகவல்களுடன் உங்கள் சந்திக்கின்றேன்.அதுவரை அன்புடன்

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here