நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, பாஜக வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பும் இதுபற்றி அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது. ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் வைப்பதால், அரசுக்குத் தேர்தல் செலவு மிச்சமாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்... அப்போதே அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. இதற்கு ஆதரவு திரட்ட எதிர்க்கட்சிகளிடம் கருத்து கேட்டுக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இது ஜனநாயக விரோதம் என்றும் சட்ட விரோதம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இது சாத்தியமில்லாதது என்று தெரிவித்துள்ளன.
ஆனால், அதிமுகவின் முன்னணி தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தம்பிதுரை பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் அந்தக் கடிதத்தில், “நான் இந்தத் திட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். 2019 பிப்ரவரி முதல் 2019 மார்ச்சுக்குள் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் இதை ஓர் அடிப்படை வருடமாக வைத்து (base year) வைத்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை, தற்போது நடைபெறும் ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில் தம்பிதுரையின் இந்தக் கருத்தின் மூலமாக 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நடத்த அதிமுக தயாராக இருப்பதாகவே தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக