அரசு ஆசிரியர்கள் வீடுகளில் தனியாக டியூஷன் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான ஆசிரியர்கள், தனியாக தங்கள் வீடுகளில் டியூஷன் நடத்துகின்றனர். இதற்கு மாணவர்களிடம் இருந்து தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்னும் சில ஆசிரியர்கள், தனியார் நடத்தும், டியூஷன் சென்டர்களில், காலை மற்றும் மாலை நேரங்களில், மாத சம்பளத்துக்காக பாடம் நடத்துகின்றனர்.
இதனால், பதினொராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், பத்தாம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் வகுப்பில் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாடங்களை சரியாக முடிப்பதில்லை என புகார் வந்துள்ளது. தாங்கள் பாடம் எடுக்கும் மாணவர்களை டியூஷனுக்கு வர சொல்லி கற்றுக் கொடுக்கின்றனர். இதனால், பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காகப் பெற்றோர்களும் பணத்தைப் பொருட்படுத்தாமல் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மாதத்துக்கு ரூபாய் 1,000 முதல் 2,000 வரை கட்டணம் கொடுத்து எங்களால் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்ப முடியவில்லை என்று சில பெற்றோர் பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில் தனியாக டியூஷன் எடுக்கக் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஆசிரியர்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என, மாவட்டக் கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக