சண்டே சர்ச்சை: மதுவில் நனையும் சினிமா நட்சத்திரங்கள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சண்டே சர்ச்சை: மதுவில் நனையும் சினிமா நட்சத்திரங்கள்!



நடிகர் ஜெய் மது போதையில் கார் ஓட்டிக்கொண்டு வந்து விபத்து ஏற்படுத்தியதை, சல்மான் கான் வழக்கோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறென்ற விவாதம் தலைதூக்கியிருக்கிறது.

இருவர் ஓட்டி வந்ததும் சொகுசுக் கார்தான். இருவரும் மது போதையில் இருந்திருக்கிறார்கள். இருவரும் விபத்து ஏற்படுத்தியிருக்கிறார்கள். என்ன ஒரு வித்தியாசம், சல்மான் கான் ஓட்டிவந்த கார் நடைபாதையில் ஏறியது. இங்கே அந்த நடைபாதை இல்லாததால், ஜெய்யின் கார் அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையின் அருகேயுள்ள பாலத்தில் மோதி நின்றது.

இந்த விபத்துகள் ஏன் அடையாறு பகுதியில் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று விசாரிப்பதற்காகக் களமிறங்கினோம்.

தற்போது விபத்து ஏற்படுத்தியிருக்கும் நடிகர் ஜெய், ஏற்கெனவே (2014) இதேபோல ஜாபர்கான் பேட்டையிலுள்ள காசி தியேட்டர் அருகே விபத்து ஏற்படுத்தியிருப்பது அனைவரும் அறிந்த தகவல். ஆனால், மூன்று வருடங்களில் சென்னையின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு ஜெய்யின் விபத்து இடம் மாறியிருப்பதன் காரணம் வெளியே தெரியாத ஒன்று.

மும்பை மாநகரில் இயங்கிவரும் பாலிவுட் என்ற திரைத்துறையின் தாக்கம் கோலிவுட்டின் அனைத்து மட்டங்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது கடந்த 10 ஆண்டுகளில்தான். ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன், படத்தின் புரமோஷன் என்று மட்டும் இல்லை. திரைப்படங்களுக்கான கொண்டாட்டம், படம் முடிந்ததும் வைக்கப்படும் பார்ட்டி என்று ஒரு படத்தில் நடிப்பதற்கு அப்பாற்பட்டு ஒரு நடிகனின் கொண்டாட்டங்களாக இவையும் தமிழ் சினிமாவில் ஏற்றப்பட்டன. இதன் காரணமாகவே, அதுவரையிலும் தனித்தனியாக வீட்டுக்குள் கொண்டாடிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் சென்னையின் சாலைகளில் வலம் வரத் தொடங்கினர்.

ரியல் நட்சத்திரங்களுக்கும், ரீல் நட்சத்திரங்களுக்குமான ஒரே ஒரு வேறுபாடு. இவர்கள் பகலில் பளிச்சென்று தெரிவார்கள். இரவில், இருளின் நிழலில் மறைந்து விடுவார்கள். அப்படிச் சென்னை சாலைகளில் காணப்பட்ட இவர்கள் குறிப்பாக மேற்கு சென்னையின் வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளிலும் அண்ணாசாலையிலும் அதிகம் காணப்பட்டார்கள். அப்போது ஜெய் மாதிரியானவர்கள் ஏற்படுத்திய விபத்துகளும், பார்ட்டி நடத்தும் பப்புகளில் ஏற்பட்ட பிரச்னைகளும் இவர்களை அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர் பக்கம் திருப்பிவிட்டன.

இது நிகழ்ந்தது எப்படியென பிரபல ஹோட்டல் ஒன்றில் கடந்த 10 வருடங்களாக மேனேஜராக பணிபுரிபவரை சந்தித்தோம். அதிக நாள்களாக தேக்கி வைத்திருந்த தகவல்கள் ஓப்பன் செய்த பீர் பாட்டில் போலப் பொங்கின.

ஒரு காலத்துல செலிபிரிட்டிக்கள் வந்தா மட்டும்தான் பப்பில் நடக்கும் பார்ட்டிகள் களைகட்டும். அவங்களைப் பார்க்கவும், பழகவுமே பல பணக்கார வீட்டு பசங்க கூட வருவாங்க. ஆனால், பணத்தை இதுக்கெல்லாம் செலவு பண்ணலாமான்னு யோசிக்கிற நிலைமை போகப்போக மாறிக்கிட்டே வந்தது. எகனாமிக்கலா எல்லா லெவல்ல இருக்க பப்ளிக்கும் பப்புக்கு வர ஆரம்பிச்சாங்க. அந்த சமயத்துல, ஒரு காலத்துல வியாபாரங்களை உருவாக்கித் தந்த செலிபிரிட்டிக்களே தலைவலியா மாறிப் போனாங்க. எல்லாரை மாதிரியும் அவங்களால, மத்தவங்களோட மிங்கிள் ஆக முடியல. அதனால அவங்க பிரைவசி கேட்டாங்க. பிரைவசின்னா, அவங்களை தொந்தரவு பண்ணாத மாதிரி பவுன்சர்ஸ் கேட்கல. அவங்க இருக்கும்போது யாருமே அங்க வரக்கூடாதுங்குறது அந்த பிரைவசி. இதை ரெடி பண்ணித் தரணும்னா எங்க தொழில் ரொம்ப அடிவாங்கும்.

மொத்தமே ஐந்து முதல் ஆறு பேர் தான் செலிபிரிட்டிக்கள் வருவாங்க. அவங்களுக்காக 50 பேர் தர்ற வருமானத்தை வேணாம்னு சொல்ல முடியாது. அந்த சமயத்துலதான் பார்ட்டில செலிபிரிட்டிக்கள் பண்ற அட்டகாசம் செய்திகளா வெளிவந்தது அதிகமாச்சு. பப்புல இருக்கவங்களைத் தவிர வேற யாரும் இந்த நியூஸை வெளிய சொல்ல முடியாதுன்னு தெரிஞ்சு அவங்களுக்குள்ளவே பேசி ஒரு முடிவெடுத்தாங்க. அதன்படி, சினிமா ஈவண்ட்ஸ் ஹோட்டல்ல நடத்துறதுக்கு ரெகமெண்ட் பண்ண வேண்டியது செலிபிரிட்டிக்களோட கடமை. அதுக்கு பிரதிபலனா, அவங்க கேட்கும்போது பார்ட்டி ரெடி பண்றது, அவங்களுக்கான பிரைவசியை கொடுக்கிறது ஹோட்டல் மேனேஜ்மென்ட்டோட கடமை. இப்படிப்பட்ட டீலிங் மூலமா நல்லா இருந்த இவங்க ரிலேஷன்ஷிப் இப்ப இருக்க ஜெனரேஷன் செலிபிரிட்டிக்கள் மூலமா காணாமல் போச்சு.

பார்ட்டி, பப்புல பலரும் செலிபிரிட்டின்னா கண்டுக்கக்கூட மாட்டாங்க. இவங்க வாங்குற சில பல லட்சம் சம்பளம் அவங்களோட ஒரு வார செலவுக்குச் சமமா இருக்கும் அளவுக்கு எகனாமிக்கலா வளந்துட்டாங்க மக்கள். அந்த மாதிரி பப்புக்கு வர்றவங்ககிட்ட அநாகரீகமா நடந்துக்குறது, அவங்க பிரைவசில தலையிடுறதுன்னு கையையும், விரலையும் வெச்சிக்கிட்டு சும்மா இல்லாததால மொத்தமாவே செலிபிரிட்டிக்களை பாய்காட் பண்ணாங்க. ஒவ்வொரு ஹோட்டல்லையும் தடை செய்யப்பட்ட செலிபிரிட்டிக்கள்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு. எந்த சூழ்நிலையிலயும் இவங்களை உள்ள விடக் கூடாதுன்னு ஸ்டிரிக்ட் ஆர்டரே இருக்கு. இந்த மாதிரி பிரச்னைகளாலதான், புதுசா அடையாறு, திருவான்மியூர் பக்கம் ஓப்பன் பண்ண பப், பார் பக்கம் இவங்க போக ஆரம்பிச்சாங்க.

ஒரு காலத்துல எல்லா செலிபிரிட்டிக்களும் கோடம்பாக்கம், வடபழனி ஏரியால தங்கியிருந்தாங்க. இப்ப பாப்புலேஷன் அதிகமானதால திருவான்மியூர் பக்கம் தானா போய்ட்டாங்க. அதனால அந்த ஏரியா இவங்களுக்கும் இன்னும் ஈசியா போச்சு என்று சொல்லிவிட்டு இரவு DJ பார்ட்டிக்கான ஏற்பாட்டைக் கவனிக்க அவர் சென்றுவிட்டார்.

இப்படிப்பட்ட செலிபிரிட்டிக்களை பணம் இருக்கும் திமிரால் ஆடுகிறார்கள் என்று புறந்தள்ளிவிட முடியாது. இவர்களைவிட அதிகப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்களெல்லாம் இப்படியான சம்பவங்களில் சிக்குவதில்லை. காரணம், அவர்கள் பெரும்பாலும், இதுபோன்ற இடங்களில் நடந்துகொள்ள வேண்டிய விதத்தை அறிந்தவர்கள். தவிர, சொந்தமாக டிரைவர் வைத்திருக்கிறார்கள். சல்மான் கான் போல டிரைவர்தான் கார் ஓட்டினார் என்று சொல்வதற்காகவாவது வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படிக்கூடத் தங்களைத் தற்காத்துக்கொள்ளச் சிந்திக்க முடியாத அளவுக்குத்தான் இந்த செலிபிரிட்டிக்களின் வாழ்க்கைச் சூழல் இருக்கிறது. சொந்தமாக டிரைவர் வைத்துக்கொண்டால் தங்களைப் பற்றிய தகவல்கள் கசிந்துவிடும் அபாயம் இருப்பதால் அதைத் தவிர்ப்பதாகச் சொல்வதில் நியாயமே இல்லை. எத்தனையோ நட்சத்திரங்களிடம் பல வருடங்கள் விசுவாசமாக இருக்கும் டிரைவர்களை இந்த சினிமா உலகம் கண்டிருக்கிறது.

போலீஸின் கெடுபிடி குறைந்துவிட்டதால் இவர்கள் இப்படித் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அடையாறு பகுதியிலேயே கடந்த சில மாதங்களில் மிகப் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று விபத்து சம்பவங்களை எவ்வித சமரசமும் இல்லாமல், தகுந்த சட்ட நடவடிக்கையுடன் காவல்துறை கையாண்டிருக்கிறது. அத்துடன், மத்திய கைலாஷ் சிக்னல், மந்தைவெளி சிக்னல், மயிலாப்பூர் சிக்னல், லைட் ஹவுஸ் சிக்னல், ஆழ்வார்பேட்டை சிக்னல் ஆகிய இடங்களில் பேரிகார்டு அமைத்து சோதனை செய்துவருகிறது சென்னை காவல்துறை. ஆனால், சம்பவம் நடைபெற்றதும் எங்கிருந்தோ வரும் ஒரு போன் கால் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. ஜெய் சம்பவத்தில்கூட அவர் சுய நினைவை இழந்து காரில் கிடந்ததும், அவர் தெளிவடையும் முன்பே வழக்கு பதிவு செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாலுமே அவர் சிக்கியிருக்கிறார்.

சிங்கம் திரைப்படத்தில் வெளிநாட்டு கொள்ளைக்காரனைக் கைது செய்ததும் மத்திய அரசு வரை அலறி, போன் வருமல்லவா... அப்படி இந்த மாதிரி சம்பவங்களின்போது போன் செய்பவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் அடைத்தால் இந்தக் குற்றங்களை குறைக்க துரை சிங்கங்கள் தேவையில்லை. சிங்கத்தைத் தோளில் தாங்கியிருக்கும் காவல் துறையே போதும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here