ரகசிய டிஜிட்டல் நாணயங்களைச் சட்டபூர்வமாக்குவது குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் டிஜிட்டல் ரகசிய நாணயங்களை அனுமதிப்பது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “ரகசிய டிஜிட்டல் நாணயங்கள் குறித்த நன்மை தீமைகளை ஆராய மத்திய நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்தது. இந்தக் குழுவின் அறிக்கை குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் சரக்கு மற்றும் மூலதன சந்தையில் ரகசிய நாணயங்களை அனுமதிப்பது குறித்து பொதுமக்களிடையே வரவேற்பு இல்லை. இதுகுறித்து சமீபத்தில் நாடாளுமன்றத்திலும் ஏராளமான கேள்விகள் எழுந்தன” என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ரகசிய நாணயங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், “இந்தியாவில் ரகசிய நாணயங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதற்கான ஆவணங்கள் உள்ளன” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக