!
மத்திய அமைச்சரவை புதிதாக மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய மத்திய அமைச்சர்களாக ஒன்பது பேர் பதவி ஏற்றனர். இணையமைச்சர்கள் நான்கு பேருக்கு கேபினெட் அந்தஸ்து வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சமீபகாலமாக மத்திய அமைச்சர்கள் பலர் கூடுதல் துறைகளைக் கவனித்து வந்ததால், மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று பேச்சு எழுந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் மகேந்திர நாத் பாண்டே, ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களுக்குக் கட்சிப் பணிகள் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் இன்று (செப்டம்பர் 3) மத்திய அமைச்சரவை விரிவாக்க விழா நடைபெற்றது, விழாவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பாஜக எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மத்திய இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினெட் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
மத்திய இணை அமைச்சர்களாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்.பிக்கள் ஷிவ் பிரதாப் சுக்லா, சத்யபால் சிங், பீகாரைச் சேர்ந்த அஷ்வினி குமாரி, ராஜ்குமார் சிங் ஆகியோர் பதவியேற்றனர்.
மத்தியப்பிரதேச எம்.பி வீரேந்திர குமார், கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே ஆகியோரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், டெல்லியைச் சேர்ந்த முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி ஹர்தீப் சிங் பூரி, கேரளாவைச் சேர்ந்த அல்போன்ஸ் கண்ணந்தானம் ஆகியோரும் இணையமைச்சர்களாகப் பதவியேற்றனர். இவர்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதற்கிடைய ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்திருந்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குச் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், ரயில்வே துறை பியூஸ் கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சர்களுக்கான துறைகள் விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக