தமிழக ஊராட்சி மற்றும் உள்ளாட்சித்துறைக்குப் பொருள்கள் வாங்குவதில் வெளிப்படையான இ-டெண்டர் விடப்படவில்லை என்றும் இதனால் பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முதல்வருக்கு அவர் நேற்று (செப்டம்பர் 26) எழுதியுள்ள கடிதத்தில், “ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடந்த இரண்டாண்டு காலமாக பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த பல மாதங்களாக அன்றாட நிர்வாக செலவினத்துக்குக்கூட மாநில நிதிக்குழு மான்ய நிதி வழங்குவது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதத்தில் மேலும், “சரி பாதிக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ரூ.10,000க்கும் குறைவாகவே நிதி விடுவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் மின்பழுது, குடிநீர் பழுதைப் பார்க்க ஒப்பந்ததாரர்கள் மறுத்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் டெங்கு போன்ற மர்மக் காய்ச்சல் பரவுகிறது. அதற்கான செலவுக்குக்கூட நிதி கொடுப்பதில்லை. அத்தியாவசியப் பணிகளுக்குச் செலவழிக்காமல் அதற்குச் செலவழிக்க வேண்டிய நிதியெல்லாம் (சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் அவர்களின் கடித எண்: 39116/2015/PR-1 3-2 நாள்: 29.10.2015 மற்றும் அரசாணை எண்: 19 ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை (SGS-3) நாள்: 02.02.2016இன்படி) அதாவது உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர வேண்டிய நிதிகளான ஒப்படைக்கப்பட்ட வருவாய், 14ஆவது நிதிக்குழு மான்யம் மற்றும் மாநில நிதிக்குழு மானியம் ஆகியவற்றிலிருந்து தலா ரூ.100 கோடி வீதம் மொத்தம் ரூ.300 கோடி மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இராண்டாண்டுக் காலமாக பொருள்கள் வாங்குவதாக இருந்தால் சந்தை நிலவரத்தைவிட கூடுதலான விலைக்கு வாங்குவதாக தெரிகிறது. இதனால் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
உதாரணமாக ஊராட்சிகளுக்கு தேவையான LED பல்பு சந்தை மதிப்பு குறைந்தபட்ச விலை ரூ.1,450இல் இருந்து அதிகபட்சமாக ரூ.2,125 வரை கிடைக்கிறது. ஆனால், அரசின் கொள்முதல் விலை ரூ.3,795இல் இருந்து ரூ.4,125/- வரை மாவட்டத்துக்கு மாவட்டம் விலை நிர்ணயம் செய்து ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.403/- கோடி கூடுதலாகச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக இந்த ஒப்பந்த முறையை பார்த்தால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதுபோல் பேனர், குப்பை பிரிக்கும் செட், தூய்மைக் காவலர்களுக்கான சீருடைகள் மற்றும் பயன்படுத்தும் உபகரணங்கள், ஆடு, மாடுகளுக்கான செட் உள்ளிட்ட பெரும்பாலான பொருள்கள் வாங்குவதற்கு E-Tender முறை கடைப்பிடிக்கப்படாமல் மிகப்பெரிய முறைகேடு நடந்து வருகிறது. மேலும் கூடுதல் இயக்குநர் முதல் ஒன்றியப் பொறியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்குக் குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு வழங்குவது கிடையாது. பணியிட மாறுதல் விண்ணப்பங்களும் வெளிப்படையாக வழங்கப்படாமல் முறைகேடுகள் நடந்து வருகின்றன. பல நேர்மையான அதிகாரிகள் தொலைதூரத்துக்கு மாறுதல் செய்யப்படுகின்றனர். இத்தனை முறைகேடுகளும் இத்துறையில் பணிபுரியும் இயக்குநர் கா.பாஸ்கரன் இ.ஆ.ப. அவர்கள் உத்தரவின் பெயரிலேயே நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
எனவே, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் நிதியிழப்பீட்டுக்கும், முறைகேட்டுக்கும் இத்துறையின் தலைவர் என்ற முறையில் இயக்குநர் கா.பாஸ்கரன் இ.ஆ.ப. அவர்கள்மீது விசாரணைக்குழு அமைத்து உடனடியாக விசாரணை செய்ய வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்துள்ளார் ஜி.ஆர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக