‘ஹூரன் இந்தியா’ பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இடம்பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 173 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஹூரன் இந்தியா ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலில் முதல் பத்து இடங்களில் முதல் இடத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி (ரூ.2,57,900 கோடி) பிடித்துள்ளார். திலிப் சங்வி (ரூ.89,000 கோடி) இரண்டாம் இடத்தையும், லட்சுமி மிட்டல் (ரூ.88,200) மூன்றாவது இடத்தையும், ஷிவ் நாடார் (ரூ.85,000 கோடி) நான்காவது இடத்தையும், அசிம் பிரேம்ஜி (ரூ.79,000 கோடி) ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சிரஸ் எஸ்.பூனவல்லா (ரூ.71,000 கோடி) ஆறாவது இடத்தையும், கவுதம் அதானி (ரூ.71,100 கோடி) ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளனர். எட்டாவது இடத்தை வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா (ரூ.70,000 கோடி) பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 25ஆவது இடத்தில் இருந்தார். இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் (2016-17) ரூ.10,561 கோடி விற்றுமுதல் செய்துள்ளது. ஒன்பதாவது இடத்தில் ரூ.62,700 கோடியுடன் உதய் கோடக் உள்ளார். பத்தாவது இடத்தில் ரூ.56,500 கோடியுடன் சுனில் மிட்டல் உள்ளார்.
இந்தப் பட்டியல் குறித்து ஹூரன் ரிப்போர்ட்டின் இந்திய நிர்வாக இயக்குநர் அனாஸ் ரஹ்மான் கூறும்போது, “பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டுமே ஒழுங்கமைக்கப்பட்ட துறையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக இத்துறைகள் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளன” என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக