இந்தியாவின் தலைசிறந்த 50 பிராண்டுகளின் பட்டியலில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி முதலிடம் பிடித்துள்ளது.
சந்தை ஆய்வு மற்றும் விளம்பர நிறுவனங்களான WPP Plc மற்றும் Kantar Millward Brown, 2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த பிராண்டுகளுக்கான பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. 17.97 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 2016ஆம் ஆண்டிலும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கிதான் முதலிடத்தில் இருந்தது. இப்பட்டியலில் பெரும்பாலும் வங்கிகளும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இரண்டாவது இடத்தில் 10.23 புள்ளிகளுடன், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல் உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் பிராண்டு (2.43 புள்ளிகள்) 11ஆம் இடத்தில் இருக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூன்றாவது இடத்திலும், ஏசியன் பெயிண்ட்ஸ் நான்காவது இடத்திலும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஐந்தாவது இடத்திலும், கோடாக் மஹிந்திரா வங்கி ஆறாவது இடத்திலும், மாருதி சுஸூகி ஏழாவது இடத்திலும், பஜாஜ் மோட்டார்ஸ் எட்டாவது இடத்திலும், ஹீரோ மோட்டார்ஸ் ஒன்பதாவது இடத்திலும், ஆக்சிஸ் வங்கி பத்தாவது இடத்திலும் உள்ளன. கடைசி இடமான ஐம்பதாவது இடத்தில் கனரா வங்கி உள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் எதிரொலியாக நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இப்பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக