வரும் உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்தே போட்டியிடுவோம் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் புதிதாக பதவியேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, இன்று (அக்டோபர் 7) தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். சந்திப்பில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,"டெங்கு காய்ச்சல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் குறித்து ஆளுநரிடம் முறையிட்டோம். பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இல்லை. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி செய்யவில்லை. நீட் தேர்வு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பிலிருந்தே ஏற்படுத்த வேண்டும்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்தே தேர்தலை சந்திப்போம்.எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு, ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. சிவாஜி, கமல் திரைப்படத்தில் இணைந்து நடிப்பது போல, ஈபிஎஸ், ஒபிஎஸ் இருவரும் இணைந்து நிஜ வாழ்க்கையில் நடிக்கின்றனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச்செல்வது தவறு. சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததால், கலந்துகொள்ளவில்லை. ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது அவர்களது விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக