முதல்வரின் கூட்டத்தைக் கலைத்த வெற்றிலை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முதல்வரின் கூட்டத்தைக் கலைத்த வெற்றிலை


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு மாவட்டமாக அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த வகையில் நேற்று அக்டோபர் 26ஆம் தேதி திருச்சியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மக்கள் கூட்டம் ஆரம்பத்திலேயே கலையத் தொடங்கியது. இதற்குக் காரணம் வெற்றிலைதான் என்றால் அது சுவாரஸ்யமானதுதானே!

திருச்சிக்கு முன் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அக்டோபர் 23ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. இதில் முதல்வர் கலந்துகொண்டார். அப்போது ராஜபாளையத்தைச் சேர்ந்த தாயும் மகளும் திடீரென மேடை அருகே தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இது ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரித்ததில்.. அந்தப் பெண்ணின் கணவரை போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் அதனால் மனம் உடைந்து முதல்வர் முன்னிலையில் தீக்குளிக்க முயற்சித்ததாகவும் தெரிகிறது.

இதுபோன்ற எந்த அசம்பாவிதமும் திருச்சி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நடக்கக் கூடாது என்று முடிவெடுத்த திருச்சி போலீஸார், விழாவுக்கு வருபவர்களுக்கு பலத்த கெடுபிடிகளை விதித்தனர்.

ஒருநாள் முன்னதாகவே, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வருபவர்கள் கையில் வாட்டர் பாக்கெட் போன்ற எந்த ஒரு பொருளையும் எடுத்துவரக் கூடாது என்று அறிவித்தனர். அதன்படி கூட்டம் நடந்த ஜி கார்னர் மைதானத்தைச் சுற்றிக் கம்புகளால் தடுப்புகள் ஏற்படுத்தி ஒவ்வொருவரையும் சோதனை செய்தே உள்ளே அனுப்பினர். வாட்டர் பாக்கெட் என்ற பெயரில் மண்ணெண்ணெயைக் கொண்டுவந்துவிடப் போகிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வோடு கையிலிருந்த எல்லாவற்றையும் பறிமுதல் செய்து வெறுங்கையோடுதான் மைதானத்துக்குள் அனுமதித்தார்கள் போலீஸார்.

ஆண்களை இப்படியென்றால், பெண்களையும் ஒரு வழி செய்துவிட்டார்கள் போலீஸார். கூட்டத்துக்கு வந்த பெரும்பாலான பெண்கள் 40 லிருந்து 50 வயதுக்காரர்கள்தான். அவர்களைப் பக்கத்து கிராமப் பகுதிகளிலிருந்து பஸ்களிலும் வேன்களிலும் அழைத்து வந்திருந்தார்கள் அதிமுகவினர். இந்நிலையில் அவர்களை சோதனையிட்ட போலீஸார் பெரும்பாலான பெண்களிடம் இருந்த வெற்றிலை பாக்குப் பொட்டலங்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.

இதனால் பலர் கோபமாக போலீசாரிடம் சண்டையே போட்டனர். ஆனாலும் போலீசார் வெற்றிலைப் பொட்டலத்தைக் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் கோபத்தோடு உள்ளே சென்ற பெண்கள் வெற்றிலை போடாமல் ஒரு மாதிரியாகவே அமர்ந்திருந்தனர். வளர்மதி பேசிக்கொண்டிருக்கும்போதே பெண்கள் கூட்டத்தில், ‘வெத்தலை பையக்கூட புடுங்கிட்டானுங்க. இங்க என்னடி வேலை, வாங்கடி’ என்ற குரல் எழ.. கொத்துக் கொத்தாக வெளியே செல்ல ஆரம்பித்தனர். இதனால் நாற்காலிகள் எல்லாம் காலியாக ஆரம்பித்தன. அடுத்து தம்பிதுரை பேசும்போது குறிப்பிட்ட பெண்கள் பகுதியில் கூட்டமே இல்லை.

உடனடியாக இதைப் பார்த்த பொறுப்பாளர்கள் போலீஸாரிடம் சொல்லி கெடுபிடிகள் எல்லாம் வேண்டாம் என்று உத்தரவிட்டனர். உள்ளே போங்க என போலீஸார் அந்தப் பெண்களிடம் கூறியபோதும், கோபத்தில், ‘இனி எங்கய்யா போயி வெத்தலை வாங்குறது’ என்று போலீசாரை சபித்துக்கொண்டே வெளியே சென்றுவிட்டனர் அந்த பெண்கள்.

’’பாதுகாப்பு கொடுத்தால் திட்றாங்க. கொடுக்கலைன்னாலும் திட்றாங்க என்ன சார் பண்றது?” என்று அலுத்துக்கொள்கிறார்கள் போலீஸார்.

திருச்சி தந்த, இந்த வெற்றிலைப் பாடத்தால், அடுத்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் போலீசாரின் கெடுபிடி அனேகமாகக் குறையலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here