முதல்வர் எடப்பாடி எது நடந்துவிடும் என்று பயந்துகொண்டிருந்தாரோ அது மெல்ல மெல்ல நடந்துகொண்டிருக்கிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற சர்ச்சைக்குரிய பதவியில் இன்னும் இருந்து கொண்டிருக்கும் சசிகலா, சிகிச்சையில் இருக்கும் தன் கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக பரோலில் சென்னை வந்திருக்கிறார். சசிகலா தரப்பில் முதலில் 15 நாள்கள் பரோலில் விடுமாறு கர்நாடக சிறைத்துறையிடம் விண்ணப்பம் வைக்கப்பட்டது. ஆனால், கடைசியில் ஐந்து நாள்கள் மட்டுமே பரோல் வழங்கப்பட்டது. அதுவும் ஜெயலலிதா சமாதி, எம்.ஜி.ஆர். இல்லம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லக் கூடாது, கட்சித் தலைவர்களைச் சந்திக்கக் கூடாது, ஊடகங்களில் பேசக் கூடாது என்று கடும் நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டது.
“சசிகலா பரோலில் வெளியே இருக்கும்பட்சத்தில் அவரை சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு ஓரளவு சுதந்திரமாக செயல்படவிட்டால் அதிமுக அமைச்சர்களை, எம்.எல்.ஏக்களை வளைத்துவிடுவார். அதனால் தன் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்து தமிழக எடப்பாடி அரசு தான் இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதித்திருக்கிறது” என்று தினகரனும் அவரது ஆதரவாளர்களும் புகார்களைக் கூறினர்.
அக்டோபர் 6ஆம் தேதி இரவு சென்னை வந்துசேர்ந்த சசிகலாவை நேற்று அவரது ஆதரவு எம்.பிக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் என்று தி.நகர் இல்லத்துக்குப் போய் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மதுரையில் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு உணர்ச்சிவசப்பட்டு சில வார்த்தைகளைக் கொட்டிவிட்டார்.
“எனக்கு ஆசாபாசங்கள் விருப்பு வெறுப்புகள் என்று எத்தனையோ இருக்கலாம். அத்தனையையும் அடக்கிக்கொண்டு, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டனாக இருந்து இந்த நேரத்தில் அமைதியாக கழகம் வழிநடத்தப்பட வேண்டும் என்பதே அமைச்சரான எனது கருத்து.
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், ஜெயலலிதாவின் ஆட்சி அமைய மாண்புமிகு சின்னம்மா அவர்கள் சிறப்பாக பாடுபட்டுள்ளார்கள். அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. அந்தக் கருத்தை நான் மாற்றிக்கொள்ளவும் இல்லை. ஆனால், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், முதல்வர் அண்ணன் எடப்பாடியாரும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் எடுக்கக்கூடிய நடவடிக்கைக்கு என்னுடைய கருத்துகள் எந்த வகையிலும் பாதகமாக அமையக் கூடாது. தனிப்பட்ட முறையில் கருத்துகளைக் கூறலாம். ஆனால், அமைச்சராக என்னுடைய கருத்துகளைக் கூற இயலாது” என்று தெரிவித்துள்ளார்.
இது முதல்வர் மற்ற அமைச்சர்கள் இடையே சலசலப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது, “இந்த ஆட்சியை சசிகலாதான் ஏற்படுத்தி வைத்தார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இப்போது ஆட்சிக்கு பாதகம் ஆகிவிடக் கூடாது என்று பேசாமல் இருக்கிறேன்” என்று செல்லூர் ராஜு பேசியிருக்கிறார். ஏற்கெனவே மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஒ.எஸ்.மணியன் ஆகியோர் சசிகலா தரப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவந்தனர்.
இதே கருத்தில் இன்னும் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களும் விரைவில் பேச ஆரம்பித்தால், தன் ஆட்சிக்கு நெருக்கடி அதிகமாகும் என்றும் கருதிய முதல்வர், அமைச்சர்களைத் தொடர்புகொண்டு, ‘சசிகலா பரோல் பற்றி ஊடகங்களில் எதுவும் பேட்டி கொடுத்துவிடாதீர்கள்’ என்று உத்தரவு போட முடியாமல் வேண்டுகோள் வைத்து வருகிறாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக