இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்தை இணைந்து எதிர்கொள்வது குறித்து இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் பேசியிருக்கிறார்கள். இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு இன்று (25.10.2017) காலையில் டெல்லியில் நடைபெற்றதையடுத்து இரு அமைச்சர்களும் இதுபற்றிப் பேசினார்கள்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன். டெல்லி வந்தடைந்த அவரை அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் இன்று காலை மகாத்மா காந்தியின் சமாதிக்குச் சென்றார். அங்கு அவர் மகாத்மா காந்தி சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, ரெக்ஸ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ், “இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உள்ளிட்ட உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதற்கும், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்பதற்கும் சமீபத்தில் ஆப்கனில் நடத்தப்பட்ட தாக்குதலே மிகப் பெரிய சான்று. பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பயங்கரவாதத்தை ஒழிக்கும் அதிபர் ட்ரம்ப்பின் கொள்கை வெற்றி பெறும். இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்பு வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவின் முக்கிய அம்சங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்திருக்கிறோம்” எனப் பேசினார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் தோளோடு தோள் நிற்கின்றன. பயங்கரவாதிகள் பாதுகாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வட கொரியாவுடனான வர்த்தக உறவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. தூதரக அளவிலான உறவும் மிக மிகக் குறைவே. பாகிஸ்தானில் பல பயங்கரவாத அமைப்புக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக