கந்து வட்டிக் கொடூரத்தால் நெல்லையில் ஒரு குடும்பமே பலியான சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளித்து உயிருக்குப் போராடி வந்த இசக்கிமுத்துவும் இன்று பரிதாப மரணம் அடைந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு. தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை டிஜிபி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், நெல்லைக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இன்று (அக் 25) தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
“ஊடகங்களில் வெளியான செய்திகளை வைத்துப் பார்க்கும்போது காவல்துறையும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் பொறுப்பின்றி நடந்துகொண்டது வெளிப்படையாகத் தெரிகிறது. மாநிலத்தில் இதுபோன்று கந்து வட்டிக் கொடுமைகள் அதிகளவு நடைபெறுகின்றன என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது” என்று கூறும் அந்த நோட்டீஸ், மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினரும் கந்து வட்டிகாரர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களைத் துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, தீக்குளிப்புச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் 4 வாரத்திலும், காவல் கண்காணிப்பாளர் 8 வாரத்திலும் பதில் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இசக்கி முத்துவும் மரணம்!
நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் தீக்குளித்த இசக்கி முத்துவும் சிகிச்சை பலனின்றி இன்று (அக். 25) உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் அவர் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும் எனப் போராடிவருகிறார்கள்.
கந்து வட்டிக் கொடுமையால் கடந்த 23ஆம் தேதி நெல்லை காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் குடும்பத்தினருடன் தீக்குளித்தார். இதில் அவருடைய மனைவியும் இரு குழந்தைகளும் சம்பவம் நடந்த தினத்தன்றே உயிரிழந்தனர். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இசக்கி முத்துவும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இசக்கி முத்துவின் இறப்பு சான்றிதழில் கையெழுத்திட அவரது தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். அவரது தந்தை பலவேசம், தம்பி கோபி ஆகியோர் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தியும் என் அண்ணன் வீடு வாங்கியுள்ளதாகவும், பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும் கூறினார்கள். அண்ணனுக்கு வீடு இல்லை. ஆனால், சொந்தமாக வீடு வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த வீட்டின் பத்திரத்தைக் கொடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம்” என்று கோபி கூறியுள்ளார்
இதனிடையே பலவேசம், கோபி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுவரை கந்து வட்டிக் கொடுமையால் பலர் உயிரிழந்த நிலையில் இசக்கி முத்து குடும்பத்தினரின் மரணம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்து வட்டிக்கு எதிராகக் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக