தற்போது திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய செயல்தலைவர் ஸ்டாலின், ‘திமுகவுக்குப் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்’ என்று அறிவித்தார். தொடர்ந்து அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘திமுக உறுப்பினர் சேர்த்தலும், புதுப்பித்தலும் செப்டம்பர் 16ஆம் தேதியில் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, கழக அமைப்புகளுக்கான 15ஆவது தேர்தல் உட்கட்சி ஜனநாயகப்படி நடைபெறும்’ என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஆரம்பித்தது. மாவட்டச் செயலாளர் முதல் ஒன்றியம், கிளை செயலாளர் என அனைவரும் ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் முடிவதற்கு இன்னும் 20 நாள்கள் உள்ள நிலையில், அடுத்து திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தலும் நடைபெறவுள்ளது. கிளை கழகம் முதல் ஒன்றியம், நகரம், மாவட்டம் என உட்கட்சித் தேர்தல் நிறைவுற்ற பிறகு திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.
தற்போதைய சூழ்நிலையில் திமுக தலைவராக கருணாநிதியும், செயல் தலைவர் மற்றும் பொருளாளராக ஸ்டாலினும், பொதுச்செயலாளராக க.அன்பழகனும் உள்ளனர். இதில், வயதைக் காரணம் காட்டியும் உடல்நலக் குறைவு காரணமாகவும், பொதுச்செயலாளர் பதவியில் தான் இனி நீடிக்க விரும்பவில்லை என்றும், எனவே வரும் அமைப்புத் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடும் முடிவில் இல்லை என்றும் ஸ்டாலினிடம் அன்பழகன் எடுத்துக் கூறியுள்ளார். இதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு திமுக மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ரேஸில் திமுக முதன்மை செயலாளரும், சட்டமன்றத்தில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் உள்ளவருமான துரைமுருகனும், துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஐ.பெரியசாமியும் களத்தில் உள்ளனர். திமுகவிலுள்ள மூத்த தலைவர்களில் துரைமுருகன் முதன்மையானவர். எனவே, துரைமுருகனுக்குப் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள அதே சமயத்தில், இவருக்குக் கடும் போட்டியளிக்கும்விதமாக ஐ.பெரியசாமியும் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
கடந்த மாதம் திண்டுக்கலில் நடைபெற்ற முப்பெரும் விழாவைச் சிறப்பாக நடத்திக் காட்டியவர் என்று ஐ.பெரியசாமி வெகுவாகப் பாராட்டப்பட்டார். எனவே, இருவரில் ஒருவர் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்து ஸ்டாலின் செயல் தலைவராகிவிட்டதால், அவர் கூடுதலாக வகித்து வரும் பொருளாளர் பதவிக்குப் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். நீண்டகாலமாக திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுவின் பெயர் பொருளாளர் பதவிக்கு அடிபட்டு வரும் நிலையில், தற்போது நடைபெறவுள்ள அமைப்புத் தேர்தலில் அவர் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த 14ஆவது அமைப்புத் தேர்தலில் திமுகவில் புதிதாக 31 மாவட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு, மொத்தமாக 65 மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பேற்றனர். தற்போதைய சூழ்நிலையில் நடக்கப்போகும் அமைப்புத் தேர்தலில் மாவட்டச் செயலாளர் மாற்றமும் இருக்கும் என்று திமுகவினர் மத்தியில் உறுதிபடக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக