உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த நாளுக்கு வாங்கிய பலூனில் பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகம் இருந்ததால் காவல்துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் அஜய் பிரதாப் சிங் என்பவர் தனது மகளின் பிறந்த நாளைக் கொண்டாட அங்குள்ள கடைக்குச் சென்று வண்ண பலூன்களை வாங்கி வந்துள்ளார்.
பல்வேறு வண்ண பலூன் பாக்கெட்டுகளை வாங்கிய அவர், வீட்டுக்கு வந்து பலூன்களை ஊதி அலங்கரிக்கத் தொடங்கினார். அப்போது அந்த பலூன்களில் “ஐ லவ் பாகிஸ்தான்” என அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
எனவே, இதனால் தனக்கும் குடும்பத்துக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று நினைத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட நாபஸ்டா காவல் நிலையத்தைச் சேர்ந்த தெற்கு மாவட்டக் கண்காணிப்பாளர் அசோக் வர்மா, பலூன்களைப் பறிமுதல் செய்து சோதனை செய்தார். சோதனையில் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் “ஐ லவ் பாகிஸ்தான்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட அதிர்ச்சி அடைந்த அவர், பாகிஸ்தானுக்கு ஆதரவு வாசகம் கொண்ட பலூன்களை வாங்கிய இடம் குறித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், கோவிந்த் நகரில் உள்ள ‘பார்டர் புரவிஷன் ஸ்டோரி'லிருந்து இந்த பலூன் வாங்கப்பட்டது என்றும், அவர்கள் டெல்லியில் உள்ள சர்தார் பஜாரிலிருந்து இறக்குமதி செய்தனர் என்றும் தெரியவந்தது.
இதுதொடர்பாக தெற்கு மாவட்டக் கண்காணிப்பாளர் அசோக் வர்மா கூறுகையில், “விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில், பலூன்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டதா? இல்லை, உள்நாட்டில் இருப்பவர்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று தெரிந்து விடும். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பலூன் பாக்கெட்டுகளிலும் 5இல் இருந்து 6 பலூன்கள் வரை பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்களுடன் இருக்கின்றன. மேலும், பலூன்களை விற்பனை செய்த இருவரையும் கைது செய்துள்ளோம். மேலும், விசாரணை நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் என்றாலே எதிரி நாடு, தீவிரவாதம் உள்ள நாடு என நினைத்துக்கொண்டிருக்கும் இந்திய மக்கள் மத்தியில், “ஐ லவ் பாகிஸ்தான்” (நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்) என்ற வாசகம் பலூனில் இடம்பெற்றதுக்கு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.
இதேபோல், கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி எரிவாயு பலூன் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள கல்நூர் என்ற இடத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகத்துடன் பறந்துகொண்டிருந்ததை டாக்சி ஓட்டுநர் கைப்பற்றிக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும், கடந்த ஆண்டு “ஐ லவ் பாகிஸ்தான்” என்ற ஆதரவு வாசகங்கள் அடங்கிய புறாக்கள் மற்றும் மாம்பழங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக