உங்களுக்கு பிடித்தமான ஃப்ளேவரில் மில்க் ஷேக்கை நேரம் காலம் பார்க்காமல் குடிப்பவரா நீங்கள்? அந்த மில்க் ஷேக்கில் இருக்கும் பால் எப்படிப்பட்டது? அது கறந்த சுத்தமான பாலில் தயாரிக்கப்பட்டதுதானா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா? சைவத்தை அதிக அளவில் உணவாக உட்கொள்ளும் ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு மாட்டின் பாலில் இருந்துதான் விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தானது கிடைக்கிறது. ஆனால், உண்மையில் நாம் உட்கொள்வது என்ன? கறந்த சுத்தமான பாலா? இல்லை, கெமிக்கல் காக்டெய்லா?
ஆன்டிபயாக்டிக்கின் எச்சம்
பெரும்பாலான விவசாயிகள் தங்கள் கால்நடைப் பண்ணையில் வளரும் பால் கறக்கும் மாடுகளின் முலைக்காம்புகளில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று போன்ற நோய்களைப் போக்க ஆன்டிபயாக்டிக் மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். சில மருந்துகள் எண்டோபராசேட்ஸ், எக்டோபராசேட்ஸ் மற்றும் பல கால்நடை சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அந்த நோய் கட்டுக்குள் வருகின்றன. எல்லாம் சரிதான். ஆனால், இந்த ஆன்டிபயாக்டிக் ஊசி மருந்துகள் கால்நடைகளின் முலைக்காம்பில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இதனால் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்களிலும் ஆன்டிபயாக்டிக் மருந்தின் எச்சங்கள் கலந்துவிடும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கின்றன. எங்கெல்லாம் இது போன்று மாடுகளுக்கு நோய் வரும்போது ஆன்டிபாயாக்டிக் சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் குறிப்பிட்ட அளவைவிட மிக அதிக அளவில் அந்த மருந்துகள் செலுத்தப்படுகின்றன என்று இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனேபாட்டில் உள்ள பின்ஸர் பண்ணையின் துணைத் தலைவர் தீபக் ராஜ் Quint பத்திரிகைக்குப் பேட்டியளிக்கும் போது, “பொதுவாகக் கறவை மாடுகளுக்கு நோய் கண்டறியப்பட்டால், உடனே விவசாயிகள் ஆன்டிபயாக்டிக் மருந்துகளை ஊசி மூலம் முலைக்காம்பில் செலுத்துகிறார்கள். அப்போது பால் கறப்பதையும் நிறுத்துவதில்லை. இதன் காரணமாக அந்த மருந்தானது பாலிலும், அந்தப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவிலும் கலந்துவிடுகிறது. இந்த ஆன்டிபயாக்டிக் எச்சங்கள் மனித உணவு சங்கிலிக்குள் நுழைந்து விடுகின்றன” என்று அதிர வைக்கும் உண்மையைக் கூறினார்.
(மாட்டிறைச்சியை மறு ஒருங்கிணைப்பு செய்யும் ஹார்மோன் Recombinant Bovine Growth Hormone(r BGH)
Bovine growth hormone (BGH) என்பது ஒரு மாட்டின் பிட்யூட்டரி சுரப்பிகள் உற்பத்தி செய்யும் வளர்ச்சி ஹார்மோன் ஆகும். இது கால்நடையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. ஆனால், இந்த Recombinant Bovine Growth Hormone என்பது கால்நடையின் பால் உற்பத்தியைச் செயற்கை முறையில் ஊக்கப்படுத்தவும் அவர்களின் லாபத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சில ஆய்வுகள் rbGH செலுத்தப்படும் பசுக்கள் பாலில் அதிக அளவு IGF-1 ஹார்மோன் உள்ளது என்று தெரிவிக்கின்றன.
எனில், இதன் உண்மையான பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? IGF-1 ஹார்மோன் கலந்துள்ள பாலை அருந்தும் மனிதனுக்கும் அதே நிலையே ஏற்படுகிறது. அதாவது பசுவின் ஹார்மோன் எப்படித் தூண்டப்பட்டு அதிக வளர்ச்சியடைய உதவுகிறதோ அதே போல் மனிதனையும் வளர்ச்சியடையச் செய்கிறது. இப்படி மனிதனை அதிக வளர்ச்சியடையச் செய்யும் ஹார்மோன்கள் சில வகையான கட்டிகள் உற்பத்தியாக வழி வகுக்கும். இந்த வகையான ஹார்மோன்கள் செலுத்தப்படும் பசுக்களானது 15லிருந்து 25 சதவிகிதம் அதிகம் பாலைச் சுரக்கின்றன. இறுதியில் அந்தப் பாலைத்தான் நாம் உணவாக உட்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.
பிற கலப்படங்கள்
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் 2012இல் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி இந்தியாவில் உற்பத்தியாகும் பால்களில் 70 சதவிகிதம் கலப்படம் என்ற பகிரங்கமான உண்மையை முன்வைத்தது.
அப்படிக் கண்டறியப்பட்ட கலப்படங்கள் இதோ :
யூரியா
மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். பாலின் அதீதமான வெண்மைக்கும், பால் அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கவும் பாலில் யூரியா கலக்கப்படுகிறது. இதனால் யூரியா பாலில் Solit not fat தன்மையை அதிகப்படுத்துகிறது.
இயற்கையான பாலில் யூரியா செறிவு 0.2 முதல் 0.7 கிராம் வரை இருக்கும். ஆனால், இந்தக் கலப்படப் பாலில் 20 மடங்கு அதிகமாக யூரியா இருக்கிறது. இப்படி பாலில் அதிக அளவில் இடம்பெறும் யூரியாவை வடிகட்டும் வேலையை நம் சிறுநீரகங்கள் செய்கின்றன. எனவே, அது பழுதடையும் வாய்ப்பை அடைகின்றன.
சவர்க்காரம்
சமீபத்தில் டெல்லியில் பாக்கெட்டில் இடப்படாத பாலின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அந்தப் பாலில் அதிக அளவில் சவர்க்காரமும் அமோனியம் சல்பேட்டும் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பாலின் கவர்ச்சிகரமான தோற்றத்தை உண்டாக்க இந்த சவர்க்காரம் சேர்க்கப்படுகிறது. இது குடல் மற்றும் இரைப்பையில் பெரும் பிரச்னையை உண்டாக்குகிறது.
ஸ்டார்ச் மற்றும் பைகார்பனேட்ஸ்
பாலில் ஸ்டார்ச், கார்பனேட்டுகள் மற்றும் பைகார்பனேட்ஸ் ஆகியவையும் கலக்கப்படுகின்றன. அதிக அளவில் ஸ்டார்ச் கலக்கப்படும் பாலை அருந்தும்போது அது வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மேலும் அது நீரழிவு நோயாளிகளுக்குப் பெரும் தீங்கை ஏற்படுத்தும். அது மட்டுமல்ல உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு ஸ்டார்ச் பாதிப்புகளை ஏற்படுத்தும். கார்பனேட்டுகள் மற்றும் பைகார்பனேட்ஸ் கலந்த பாலைப் பருகும்போது அது ஹார்மோனில் சமநிலையை சீர்குலைக்கும். இதனால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
OMICS International நிறுவனம் நடத்திய ஆய்வில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சர்க்கரை மற்றும் உப்பு ஆகிய பொருள்கள் பாலில் கலக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
“பொதுவாக இப்படிப்பட்ட கலப்படப் பால்களை குடிக்கும்போது தீவிர ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று டாக்டர் தத்தா ரூபாலி தத்தா கூறுகிறார்.
பாலில் இத்தனை கலப்படமா? பாலில் இத்தனை கோளாறுகளா என்று நீங்கள் சோர்ந்து போய்விட வேண்டாம். அஞ்சியும் நடுங்க வேண்டாம். இந்த துயரத்திலிருந்து விடுபட ஒரு சிறந்த வழி இருக்கிறது. ஆன்டிபாயாக்டிக் மற்றும் கலப்படம் செய்யாத கால்நடைப் பண்ணைகளுக்கு நேரடியாகச் செல்லுங்கள். அங்கே சுத்தமான கறந்த பாலை வாங்குங்கள். நீங்கள் பால் பண்ணைகளுக்குச் செல்ல வேண்டும். அங்கே எப்படி இயற்கையான வழிமுறைகளில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை நேரடியாகப் பார்வையிட வேண்டும். உங்கள் பாட்டி நீங்கள் எதை அருந்த வேண்டும் என்று சொன்னாரோ... அந்தப் பாலை நீங்கள் அருந்த வேண்டும்.
நன்றி: https://www.thequint.com/fit/chew-on-this/milk-adulteration-health-impacts
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக