குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்று நாள்கள் தொடர் பிரசாரத்தை ராகுல் காந்தி நேற்று (நவம்பர் 11) தொடங்கியுள்ளார்.
குஜாரத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி போட்டியை ஏற்படுத்திய குஜராத் சட்டமன்றத் தேர்தல் நாடு முழுவதும் கவனிக்கப்படும் முக்கியத் தேர்தலாக உள்ளது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 22 வருடங்களாக பாஜகவே ஆட்சியில் உள்ளது.
இந்த முறை பாஜகவின் மீது குஜராத் மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வடக்கு குஜராத்தின் வடக்கு மாநிலங்களில் மூன்று நாள்கள் பிரசாரத்தை நேற்று தொடங்கியுள்ளார்.
முன்னதாக குஜராத்தின் தொழில் நகரமான சூரத் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் நடந்த கூட்டங்களில் நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாக கூறி வருகிறார். பிரசாரத்தின் நடுவில் அந்தப் பகுதிகளில் உள்ள முக்கியக் கோயில்களுக்கும் ராகுல் காந்தி சென்று வருகிறார். கோயில்களுக்குச் சென்று வருவது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் மதச்சார்பின்மை மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக