‘தினத்தந்தி’ பவள விழாவில் இறையன்புக்கு இலக்கிய விருதுடன் வழங்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் தொகையை ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக்கு வழங்க உள்ளார்.
‘தினத்தந்தி'’ பவள விழா நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்புக்கு 2017-க்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதை மோடி வழங்கினார். அவர் எழுதிய '’இலக்கியத்தில் மேலாண்மை' என்ற புத்தகத்துக்காக இவ்விருது வழங்கப்பட்டது. விருதுடன் இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் கேடயமும் அளிக்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர் விடுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு உபகரணம் பொருத்த வழங்க உள்ளதாகப் பிரதமரிடம் இறையன்பு மேடையிலேயே தெரிவித்தார். பிரதமர் அவரது முடிவை பாராட்டி அவர் தோளில் தட்டிக்கொடுத்தார்.
மயிலாப்பூரில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான ஆதிதிராவிடர் நல விடுதியில் சில வசதிகளை மேம்படுத்துவதற்காக முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இரு மாதங்களுக்கு முன் விடுதியில் நூலகம், விளையாட்டு வசதிகள், உடற்பயிற்சி மையம் போன்றவற்றை தன்னார்வலர்கள் உதவியுடன் அமைத்துக்கொடுத்தது. அதன் திறப்பு விழாவில் இறையன்பு பங்கேற்றார்.
மாணவர்களின் எழுச்சியைக் கண்ட இறையன்பு, தன்னிடமிருந்த 100 புத்தகங்களை விடுதிக்கு வழங்கினார். சில வங்கிகளைத் தொடர்பு கொண்டு விடுதி கட்டமைப்புகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். தற்போது தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை விடுதி குடிநீர் வசதிக்காக வழங்க முடிவு செய்துள்ளார்.
இத்தொகையை நவம்பர் 15ஆம் தேதி விடுதி நிர்வாகத்திடம் வழங்க உள்ளதாக இறையன்பு தெரிவித்துள்ளார். மேலும், விடுதி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முன்மாதிரி விடுதியாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
விருது பெற்ற ‘இலக்கியத்தில் மேலாண்மை’ புத்தகத்தில் ஏராளமான அறிஞர்களின் சிந்தனைகள், நெகிழவைக்கும் வரலாற்று உண்மைகள், சின்னச் சின்னதாய் இனிப்பு நிரம்பிய கதைகள், நுட்பமான தர்க்க வாதங்கள் என்று 600 பக்கங்களில் பல்வேறு தரவுகள் இடம்பெற்றிருக்கிறது.
திருவள்ளுவரையும் ஷேக்ஸ்பியரையும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளதோடு, இந்த இருபெரும் கவிஞர்களின் ஆளுமை குறித்து இந்த நூலில் அதிகம் இடம்பெற்றுள்ளன. பல மருந்துகளை உள்ளடக்கிய ஒற்றைக் குப்பி போல, எட்டுத் திக்கும் சென்று அறிவுச் செல்வங்களைச் சேர்த்து உருவாக்கிய வாழ்வியல் பாடநூலாக இது விளங்குகிறது.
இறையன்பு எழுதியுள்ள, ‘வாய்க்கால் மீன்கள்’ பல கல்லூரிகளில் பாடமாக வைத்திருப்பதோடு, ஓடும் நதியின் ஓசை, ஏழாவது அறிவு உள்ளிட்ட பல நூல்கள் மாணவர்களிடையே புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக